Wednesday, January 8, 2014

இந்தப் பிரசுரம் காலத்தின் கட்டாயம்..

           விகடன் குழுமத்தில் பணியாற்றும் திரு திருமாவேலன் ஜூனியர் விகடனில் இலங்கைப் பிரச்சனையில் சிபிஎம் -ன் நிலை தடுமாற்றத்தை விளக்கி தொடர் கட்டுரைகள் எழுதினார்அவைகளை தொகுத்து சில மாதங்களுக்கு முன்பாக "நீங்கள் எந்தப் பக்கம் - மார்க்சிஸ்டுகள் சிந்தனைக்கு" என புத்தகமாக விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளதுஅதை சமீபத்தில் படிக்க நேர்ந்ததுஅந்த புத்தகத்திற்கு அணிந்துரை ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சந்துரு அவர்கள் அற்புதமாக எழுதியுள்ளார்அந்த அணிந்துரையை படிப்பவர்கள் நிச்சயமாக புத்தகத்தை படிக்க வேண்டும் என நினைப்பார்கள்


இலங்கைப் பிரச்சினையில் மட்டுமல்ல  கூடங்குளம், முல்லைப் பெரியாறு, கஸ்தூரி ரெங்கன் அறிக்கை என்று பல விஷயங்களில் அவர்கள் தமிழர்களுக்கு பதில்சொல்ல வேண்டி இருக்கிறது.. நிச்சயம் எனக்கு மார்க்சிஸ்ட்டுகள் மீது வன்மமெதுவும் இல்லை.. ஆதங்கம்தான்.. நாம் குறிப்பிட்ட எல்லாபிரச்சினைகளிலும் தவறான வழிநடத்துதல் காரணமாக அவர்கள் எதிராகவே நிற்பதைத்தான் நாம் கண்டிக்கிறோம். எதிர்க்கிறோம்..  அம்பலப் படுத்துகிறோம்என்ற அடிப்படையில் திரு சந்துரு அவர்களின் அணிந்துரையை மட்டும் எனது வலைப்பதிவில், முகநூலில் பதிவு செய்வதற்கு திரு .திருமாவேலன் அவர்களை தொடர்பு கொண்டேன்அவரும் அனுமதி நல்கினார், அவருக்கு நன்றியுடன், பதிவு கீழே...

இந்தப் பிரசுரம் காலத்தின் கட்டாயம்..

திருமாவேலன் இன்று தமிழகத்திலேயே மிக முக்கியமான அரசியல் நோக்கர்அவரது அரசியல் விமர்சனங்களுக்கு ஆளாகாத தமிழக அரசியல் தலைவர்களே இல்லை எனலாம்அவர், ஈழப் பிரச்சனை தொடர்பான விஷயத்தை "மார்க்சிஸ்ட்டுகளின் சிந்தனைக்கு" என்று தலைப்பிட்டு எழுதிய தொடர் கட்டுரையைப் பிரசுரமாகக் கொண்டு வர இருப்பதாகவும், அதற்கு நான் முன்னுரை எழுத வேண்டும் என்றும் திடீரென்று ஒரு நாள் தொலைபேசியில் கேட்டபோது அதை எனக்கு அளித்த கெளரவமாகவே கருதுகிறேன்.
ஈழப்பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் முரண்பட்டு அதிகாரபூர்வமாக முதலில் வெளியேற்றபபட்ட அந்தஸ்து உடையவன் என்பதால் அவர் கேட்டாரோ என்று எனக்குத் தெரியாதுஅவரது கட்டுரைத் தொடர் பரவலாக தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்ட் தோழர்களின் பார்வைக்குப் போக வேண்டும் என்று கருதிய பலரில் நானும் ஒருவன்.
          அவரது கட்டுரைக்கு எதிர்வினையாக தோழர் .வாசுகி எழுதியதை அதே அளவு அங்கீகாரம் கொடுத்துப் பிரசுரித்தது விகடனின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. "ஆயிரம் பூக்கள் மலரட்டும், நூறு கருத்துக்கள் மோதட்டும்" என்று கூறிய மாசேதுங்கின் பொன்மொழிக்கு உதாரணம் அந்தச் செயல்.

      உ.வாசுகியாகட்டும், அல்லது தினமணியில் நடுப்பக்க கட்டுரை எழுதிய தோழர் டி.கே.ரங்கராஜனாகட்டும் இருவருமே ஒரு விஷயத்தில் இசைந்த கருத்தை கூறியுள்ளனர். மார்க்சிய தத்துவத்தை இயந்திர கதியில் புரிந்து கொள்ளக் கூடாது, ஒவ்வொரு நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்பவே அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றுமற்றும் எந்தத் தேசியக் குழுவும் பிரிந்து போகும் உரிமையையோ அதை விளக்கிய தோழர் லெனினின் தேசிய இனங்களைப் பற்றிய கொள்கையையோ அவர்கள் ஏற்கத் தயாரில்லைஇந்த விதமாக உண்மையை ஒப்புக்கொண்ட அவர்களுக்கு நாம் முதலில் நன்றியைச் செலுத்த வேண்டும்திருமாவேலனுக்கும் வாசுகிக்கும் நடந்த ஈழத் தமிழர் பற்றிய கட்டுரை சிங்கிள்சில் அட்வான்டேஜ் திருமாவேலனுக்கே.
         சிபிஐ(எம்) கட்சியின் அகில இந்திய மாநாடு (காங்கிரஸ் என்று அவர்களால் அழைக்கப்படுகிறது) கொல்கத்தாவில் 1985 டிசம்பர் 25 முதல் 30 வரை நடைபெற்றதுநாடு முழுவதும் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் விவாதிக்க கட்சியின் மத்தியக் குழு (Central Committee) வரைவு அரசியல் அறிக்கை (draft political report) ஒன்றை தயார் செய்ததுஅதில் சர்வதேச பிரச்சனைகளில் தொடங்கி ஸ்தலப் பிரச்சனைகள் வரை கட்சியினர் நிலை என்ன என்பது பற்றி விவாதிக்க கருப்பொருட்கள் இருந்தன.
         அந்த வரைவு அறிக்கை புதுடெல்லியில் 1987 அக்டோபர் 1 முதல் 4 வரை நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதுஅந்தக் கூட்டத்தில் கட்சியின் தமிழக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.நான்கு நாள் விவாதத்திற்கு பிறகு தயாரான அந்த வரைவு அறிக்கை, கட்சித் தோழர்களுக்கு அனுப்பப்பட்டது. மேலும், கட்சியின் அதிகாரபூர்வமான வார இதழ் பீப்பிள்ஸ் டெமாக்ரசி 20/10/1985 தேதியிட்ட இதழுடன் பின் இணைப்பாக அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.  இதை எல்லா மட்டங்களிலும் விவாதித்து உறுப்பினர்களின் கருத்துக்களை அறிந்து மாநாட்டில் பங்கு பெறும் பிரதிநிதிகள் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே அதன் நோக்கம்.
         மத்தியக் குழுக் கூட்டம் புதுடில்லியில் நடைபெற்ற ஒரு வாரத்துக்கு முன்பு (சரியாக 24/09/1985 அன்று) தமிழகத்தில் சிபிஐ(எம்) உள்ளிட்ட அனைத்துக் கட்சி பந்த் நடைபெற்றது.  அன்று தமிழகத்தை ஆண்ட அ.இ.அ.தி.மு.க அதில் கலந்து கொள்ளவில்லை.  கட்சியின் அணிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் தமிழ் மாநிலக் குழு அறிக்கை விட்டது.
ஸ்ரீலங்காவில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொலைகளையும், வன்முறைகளையும் கண்டித்து நடைபெற்ற பந்த் போராட்டம் தமிழகம் தழுவிய போராட்டம்.  அதில் சிபிஐ (எம்) கட்சியும் பங்கெடுத்தது.  அதுவும் ஒரு வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான போராட்டம்.  தமிழகத்திலுள்ள முக்கிய சிபிஐ(எம்) தலைவர்கள் அன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.  சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் ஏ.நல்லசிவன், கே.ரமணி எம்.எல்.ஏ., என்.சங்கரையா, வி.வரதராஜன், அப்துல் வஹாப் மற்றும் கே.முத்தையா ஆகியோர் தலைமை வகித்தனர்.  அவர்களில் முக்கால் வாசிப் பேர் அன்றைய மத்தியக் குழு உறுப்பினர்கள்.
             இந்த போராட்டத்தில் பங்கு பெற்ற பின் மத்தியக் குழுவுக்குச் சென்றனர்.  அப்போது வரைவு அரசியல் அறிக்கை அகில இந்திய காங்கிரஸூக்குத் தயாராகிறது.  அதில் ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ் மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலைப் பற்றி ஒரு வரிகூடக் கிடையாது.  அதற்குப் பதிலாக ஸ்ரீலங்காவில் தேசிய வெறியைத் தூண்டிவிட மட்டுமே, அமெரிக்கா இன மோதல்களைப் பயன்படுத்துகிறது எதை குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
          ஆசியாவில் அமெரிக்காவின் முயற்சிகள், என்ற தலைப்பில் ஒரு குறிப்பு.  அதில் ஒன்பது வரிகளில் இந்தியத் துணைக் கண்டத்தில் அமெரிக்க ஏகாதியபத்தியத்தின் தந்திர முயற்சிகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.  அதிலும் ஸ்ரீலங்காவின் நிலை பற்றி ஒன்றே அரைக்கால் வரிதான் உள்ளது.  அரசியல் அறிக்கையில் இது பற்றிக் கூறப்பட்டதை மொழிபெயர்த்துக் கூற வேண்டும்.
           "இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள, தனக்குக் கீழ்படியக்கூடிய பிற்போக்கு அரசுகளின் வளையத்தின் உதவியுடன் இந்தியாவைச் சுற்றி வளைக்கும் சதியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. பாக்கிஸ்தானின் ஆக்கிரமிப்புக்கு நவீன ஆயுதங்களை வழங்குகிறது.  ஸ்ரீலங்காவிலுள்ள இன மோதல்களைப் பயன்படுத்திக் கொண்டு இனவெறியைத் தூண்டிவிட முயற்சிக்கிறது (இந்தியாவை துண்டாட வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில்) உள்நாட்டு சீர்குலைவு சக்திகளையும், பிரிவினை வாத கும்பல்களையும் பகிரங்கமாக ஆதரிக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம் பாக்கிஸ்தான், ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் உள்ள விரோத முகாம்களை வைத்து இந்தியாவையும், இந்து மகாக் கடவுளையும் வளைக்கப்பார்க்கிறது"
           ஏன் இப்படிப்பட்ட காமாலைப் பார்வைமாநிலத்திலோ மிகப் பெரும் பிரச்சனை.  ஆனால், அகில இந்திய அளவில் ஒரு கொசுக்கடி அளவுக்குக் கூட இந்த பிரச்சனை கையாளப்படவில்லை.  தமிழகத்தலைமை இது பற்றிப் பேசவில்லையா? அல்லது அவர்கள் என்ன பேசினாலும் அகில இந்திய தலைமை அரசியல் பார்வைக்கு அதில் உடன்பாடில்லையா?
        இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலைகளை என்றைக்குமே தமிழ்நாட்டு சிபிஐ(எம்) தலைவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.  கொல்கத்தா அகில இந்திய காங்கிரஸுக்குப் பிறகு ஸ்ரீலங்காவில் தமிழ் மக்கள் நிலை இன்னும் மோசமடைந்து கொண்டேதான் இருந்தது.  வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் கற்காலத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  மின்சாரம் இன்றி இருளில் தள்ளப்பட்ட அவர்களுக்கு உணவுப் பெபாருட்கள், டீசல் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் செல்லும் வழிகள் முற்றிலும் அடைக்கப்பட்டன.  தன்னுடைய தேசத்திலேயே ஒரு பகுதியை முற்றுகையிட்டுப் போர் புரிந்த நாடு உலகிலேயே ஸ்ரீலங்கா மட்டும்தான் இருக்க முடியும்.
          அந்த மக்களின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார முற்றுகையை எதிர்த்து உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  தமிழகம் எங்கும் வரலாறு காணாத ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள், மாபெரும் மனித சங்கிலிகள் முளைத்தன.
        இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்கிறோம் என்று கூறி சிங்கள அரசின் அதிபர் ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சிக்குப் பலியாகி இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.  29/07/1986 அன்று இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஒப்பந்தம் (Indo Srilankan Treaty) செய்து கொண்டன.  பாதிக்கப்பட்ட மக்களின், கட்சிகளின் ஒப்புதல் இன்றியே அந்த ஒப்பந்தம் தமிழ் மக்கள் மீது திணிக்க முயற்சிக்கப்பட்டது.  விடுதலைப்புலிகளைத்தவிர பல ஜனநாயக சக்திகள் அந்த ஒப்பந்தம் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு அளிக்காது என்று எதிர்த்தனர்.  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதோடு அல்லாமல் அன்றைய ராஜிவ் காந்தி அரசு ஸ்ரீலங்காவின் 'அமைதி' காக்க இந்திய ராணுவத்தை IPKF  என்ற பெயரில் அனுப்பியது.  தன்னால் சாதிக்க முடியாததை சிங்கள அரசு, இந்திய அரசின் ராணுவ பலத்தால் சாதிக்க முயன்றது. IPKF நடத்திய கொடுமைகளைக் கண்ட இந்திய மக்கள் கொதித்து எழுந்தனர்.  யாழ்ப்பாணத்தில் சிங்கள முற்றுகையைத் தகர்க்க யாரெல்லாம் இந்திய ராணுவத்தை அனுப்பு என்ற கோரிக்கையை வைத்தார்களோ அவர்களே IPKF ஐ வாபஸ் வாங்கு என்று கூறும்படியாகிவிட்டது.  பக்கத்திலுள்ளவன் கையை எடுத்து அடுத்தவன் கண்ணைக் குத்து என்னும் வகையில் ஜெயவர்த்தனாவின் நரித்தந்திரம் செயல்பட்டது.
           இதையெல்லாம் பார்த்து எந்த நடவடிக்கையும் எடுக்காத சிபிஐ (எம்) தலைமையின் மீது அதன் தமிழக ஆதரவாளர்களுக்கு வெறுப்பு எழுந்தது.  பல மட்டங்களில் இது பற்றி வெளிப்படையாகவே விவாதிக்க முயன்றனர்.
        சிபிஐ(எம்) தலைமையிலான மேற்கு வங்க அரசின் நிதியமைச்சராக இருந்த அசோக் மித்ரா புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்.  அவர் மார்க்சிய தத்துவத்தை நம்பினாலும், மார்க்சிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவில்லை.  மேற்கு வங்கத்தில் பதவியில் இல்லாத போதும் அவர் சிபிஐ(எம்) தலைமையிலான கேரள அரசுக்குப் பொருளாதார ஆலோசகராக இருந்தார்.
           அவர், இலங்கைப் பிரச்சனைகள் பற்றி கொல்கத்தாவில் இருந்து வெளியாகும் 'டெலிகிராப்' ஆங்கில நாளிதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார்.  இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கடுமையாகச் சாடினார்.  அவரது கட்டுரைகளில் தெரிவித்த கருத்துக்களுக்கு சிபிஐ(எம்) தலைமை மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு தமிழக சிபிஐ(எம்) கட்சி வழக்கறிஞர்கள் சும்மா இருக்கத் தயாரில்லை.  ஆகவே, கட்சி வழக்கறிஞர்கள் இலங்கைப் பிரச்சனையில் சிபிஐ(எம்) கட்சியின் அணுகுமுறை பற்றி அதிருப்தி தெரிவித்தனர்.  தேசியப் பிரச்சனையில் அவர்களது நிலைமையையும், இலங்கைப் பிரச்சனையில் அவர்கள் காட்டும் மக்கள் விரோதப் போக்கையும் கண்டித்து ஒரு நீண்ட குறிப்பை மத்திய குழுவுக்கு அனுப்பினர்.
          21/11/1987ல் ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி சென்னையில் பாரிமுனையிலிருந்து சைதாப்பேட்டை வரை அறிஞர்கள், கலைஞர்கள் நடத்திய மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.  மனித உரிமைக்கு தினமும் நீதிமன்றத்தில் குரல் கொடுக்கும் கட்சி வழக்கறிஞர்களும் அந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்து கொண்டோம்.  செய்தித்தாள்களில் வெளிவந்த எனது பெயரைப் பார்த்த கட்சித் தலைமை அந்தச் செயல் பற்றி என்னிடம் விளக்கம் கேட்டது.  மனிதாபிமானம் மார்க்சிசத்துக்கு அப்பாற்பட்டதல்ல என்று நான் கூறினேன்.
          தமிழகத்திலுள்ள அறிவுஜீவிகளுக்கு, குறிப்பாக சிபிஐ(எம்)-க்கு ஆதரவான அறிவுஜீவிகளுக்கு இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளையும், இந்திய இலங்கை துரோக ஒப்பந்தத்தையும் விளக்க முற்பட்டேன்.  இலங்கையில் அன்றைய நிலை பற்றிப் பேச நானும், பேராசிரியர் மோசஸ் அவர்களும், "அக்கறையுள்ள குடி மக்கள் சங்கம்" என்ற பெயரில் சேத்துப்பட்டு, உலகப் பல்கலைக்கழக சேவை மைய அரங்கில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தோம்.  அந்தப் பொதுக் கூட்டத்தில் பேச சிபிஐ(எம்) கட்சியினர் பெருமதிப்பு வைத்திருந்த பொருளாதார நிபுணரும், தொடர்ந்து தனது கருத்தை ஊடகங்களில் பதிவு செய்தவருமான அசோக் மித்ராவை அழைத்தேன்.  அவர் எனது நல்ல நண்பரும் கூட.  அவரும் கூட்டத்தில் பேச இசைந்தார்.
           திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வழியாக அவர் கொல்கத்தா செல்லும் முன் கூட்டத்தில் பேச இசைந்தார்.  கூட்டத்துக்கான அழைப்பிதழ்கள் கிடைத்தவுடன் சிபிஐ(எம்) தலைமை அதிர்ந்தது.  இப்படி ஒரு கூட்டம் நடைபெற்றால் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் கட்சித் தலைமைக்கு எதிரான கருத்துக்கள் பரவ நேரிடும் என்று அந்தக் கூட்டம் நடக்காமல் இருக்க முயற்சி செய்தனர்.  அதனால் அப்போது கேரள முதலமைச்சர் ஈ.கே.நாயனார் அவர்களைத் தொடர்பு கொண்டு திருவனந்தபுரத்திலிருந்த அசோக் மித்ராவை கூட்டத்தில் கலந்து கொள்ளாதிருக்கும்படி செய்துவிட்டனர்.  கடைசி நேரத்தில் தொலை பேசியில் என்னை அழைத்த அசோக் மித்ரா அடுத்த முறை வரும்போது கூட்டத்தில் கலந்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார்.
          திடீரென்று முக்கிய பேச்சாளர் வராததால் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அறிவாலையத்தில் சந்தித்து வை.கோ-வை கூட்டத்திற்கு அனுப்பித் தருமாறு கேட்டோம்.  அவர், தமிழர் பிரச்சனைக்கு வங்கத் தலைவரை அழைத்து ஏமாந்து விட்டீர்கள், தமிழனைத் தமிழன்தான் காப்பாற்ற வேண்டும் என்று தனக்கே உரித்தான பாணியில் கேலி செய்தார்.  ஆனால் கடைசி வரை வை.கோ-வை அனுப்ப மறுத்துவிட்டார்.  ஆக தமிழினத் தலைவரும் தமிழர் பிரச்சனையில் கைவிரித்ததுதான் மிச்சம்.
              22/11/1987 அன்று சிபிஐ(எம்) தலைமையின் திட்டத்துக்கு எதிரான கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.  இதற்கு இடையில் மார்க்சிஸ்ட் வழக்கறிஞர்களுக்கு இலங்கைப் பிரச்சனையில் இருக்கும் குழப்பத்தைத் தீர்க்கக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.எம்.எஸ்.நம்பூதரிபாட் சென்னைக்கு வந்தார்.  கூட்டம் அரை மணி நேரத்தில் முடிந்தது.  மார்க்சிஸ்ட் வக்கீல்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை அவரால் தீர்க்க முடியவில்லை.  நமக்கு இசைவான ஒரு கருத்தில்லை என்று ஒருமித்த கருத்துடன் கூட்டம் கலையலாம் (we agree to disagree) என்று கூட்டத்தை முடித்து வைத்தார்.
            அதன் பின்னர் கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கையில் இறங்கி, விசாரணைக்குழு ஏற்பாடு செய்யப்பட்டது.  அசோக் மித்ராவை அழைத்துக் கூட்டம் போட ஏற்பாடு செய்தது யார் என்பதாக விசாரணை தொடங்கியது.  கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது நான்தான் என்றும் கட்சியில் ஈழத்தமிழ் மக்கள் கொள்கை பற்றி எனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறினேன்.  உடனே என்னைக் கட்சியை விட்டு வெளியேற்ற முடிவு செய்தனர்.  13/01/1988 அன்று டெலிகிராப், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ்களில் என்னைக் கட்சியைவிட்டு வெளியேற்றிய நிகழ்வு முக்கியச் செய்தியாக வெளிவந்தது.
               அடுத்த நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று கட்சித் தலைமையில் அதிகாரபூர்வ செய்திக் குறிப்பு பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்டது.  கட்சி விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்காக நான் வெளியேற்றப் பட்டதாகக் கூறி சிபிஐ(எம்)-ன் தலைமை திருப்திப்பட்டுக் கொண்டது.  நான் எப்போது திடீரென்று தொழிலாளர் விரோதியானேன் என்று எனக்கும் புரியவில்லை.  என் வழக்கறிஞர், கிளைத் தோழர்களுக்கும் புரியவில்லை.  1968 முதல் 1988 வரை தொடர்ந்து மாணவர் அணியிலும் தொழிலாளர் பிரிவிலும் தொண்டனாகவும், உயர்நீதிமன்றத்தல் அவர்களது வழக்குகளை திறம்பட நடத்தியதைத் தவிர, தொழிலாளர்களுக்கு விரோதச் செயலைக் கனவிலும் நினைக்காத எனக்கு அப்படி ஒரு பட்டம் வழங்கியது கட்சித் தலைமை.
இந்தச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்து கொச்சியிலிருந்து என்னை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் சொன்னார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்.  அவர் சொன்னதன் சுருக்கம் இதோ! "தோழரே நமது சிவப்பு நிறம் அவர்களுக்குப் போதவில்லை போலிருக்கிறது. வேண்டுமானால் நாம் ஒரு பிங்க் நிறத்தில் (pink party) கட்சி ஆரம்பிக்கலாம்"
இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு பிறகு அதை நிறைவேற்ற ஸ்ரீலங்கா அரசியல் சட்டத்தில் 13-வது சட்டத் திருத்தம் சிங்கள அரசால் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டது.  13-வது சட்டத் திருத்தத்தின்படி தமிழ் மக்களின் மரபுரீதியான வாழ் நிலங்களாகிய வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு பற்றிய பிரிவை ஸ்ரீலங்கா சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து விட்டது.  மிச்சமுள்ள திருத்தங்களை வாபஸ் பெற தற்போது ராஜபக் ஷ‌ேஅரசு புதிய சட்ட வடிவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.  இன்னும் அந்த ஒப்பந்தத்தில் என்ன மிச்சம் இருக்கிறது என்றே யாருக்கும் தெரியாது.  இருப்பினும் 13-வது அரசியல் சட்டப்பிரிவை அமுல்படுத்தவும், அரசியல் தீர்வு காணவும் மார்க்சிஸ்ட்டுகள் கூறி வருவது வேதனையைத்தான் அளிக்கிறது.
           இன்று வரை ஈழத் தமிழர் பிரச்சனையில் முறையான விவாதமோ அல்லது சரியான அணுகுமுறையோ இல்லாத சிபிஐ(எம்) கட்சியின் மீது அதன் ஆதரவாளர்களுக்கே பெரும் ஏமாற்றம் உண்டு.  ஆகவே காலம் கடந்து போனாலும் அந்த கட்சியின் ஈழத் தமிழர் கொள்கையை விமர்சனம் செய்து மார்க்சிஸ்ட்டுகளின் சிந்தனைக்கு விருந்து படைத்த திருமாவேலனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.  தொடர் கட்டுரையை வாசிக்க முடியாத தோழர்கள் பயனடையும் வகையில் அது ஒரு தனிப்பிரசுரமாக வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.  மறுபடியும் மார்க்சிஸ்ட் தோழர்கள் ஆத்ம பரிசோதனை ஒன்றுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள உதவும் இந்தப் பிரசுரம் காலத்தின் கட்டாயம்.
கே.சந்துரு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
சென்னை - 01/07/2013

No comments: