Friday, January 3, 2014

சிபிஐ சிக்கல்களும் சர்ச்சைகளும்

ஏதாவதொரு குற்றம் நிகழ்ந்தால், அது குறித்த விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் நம்பினால், உடனே சிபிஐயைத்தான் அவர்கள் துணைக்கு அழைப்பது வழக்கம். குறிப்பிட்ட வழக்கை சிபிஐ விசாரணை செய்யவேண்டும் என்றுதான் அவர்கள் கோருவது வழக்கம். குறிப்பாக அரசியல் வட்டாரங்களில் இந்தக் குரல் பலமாக ஒலிப்பதுண்டு. காரணம், சிபிஐ ஒரு வழக்கை எடுத்துக்கொண்டால் விசாரணையில் பாரபட்சம் இருக்காது என்பது பரவலான ஒரு நம்பிக்கை. ஐம்பது ஆண்டு கால பாரம்பரியம் மிக்க இந்த அமைப்பு குறித்து குவஹாத்தி உயர் நீதிமன்றம் வெளியிட்ட ஒரு தீர்ப்பு அதிர்ச்சியையும் வியப்பையும் ஒருசேர கிளப்பியுள்ளது.
தீர்ப்பு விவரத்தைப் பார்ப்பதற்கு முன்னால் சிபிஐ குறித்த ஒரு சிறு அறிமுகம்.
அறிமுகம்
1941ல் சிறப்புக் காவல் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. இது 1 ஏப்ரல் 1963 அன்று மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) என்று பெயர் மாற்றப்பட்டது. 5600க்கும் அதிகமானோர் சிபிஐயில் பணியாற்றுகின்றனர். புது டெல்லியில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 52 கிளைகள். சிபிஐக்காக ஒதுக்கப்படும் ஆண்டு பட்ஜெட் 303.79 கோடி.
தலைமை புலனாய்வு ஆணையர், உறுப்பினர் ஆணையர்கள், உள்துறை செயலாளர், மத்திய ஒருங்கிணைப்பு மற்றும் பொதுமக்கள் குறைகள் துறை செயலாளர் ஆகியோர் அடங்கிய குழுவால் முன்மொழியப்பட்டு இந்திய குடியரசுத் தலைவரால் சிபிஐயின் இயக்குநர் நியமிக்கப்படுகிறார்.
சிபிஐயின் முதல் இயக்குநர், டி.பி. கோலி. ஏப்ரல் 1963 முதல் மே 1968 வரை பதவியிலிருந்த இவருக்கு பதவிக் காலத்திலேயே 1967ல் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதுவரை 24 இயக்குநர்கள் சிபிஐயில் பணியாற்றியிருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த எஃப்.வி. அருள், ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த டி. கார்த்திகேயன், ஆர்.கே.ராகவன் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
வழக்குகள்
கொலை, கடத்தல், தீவிரவாதம், நிதி முறைகேடுகள், ஊழல் தடுப்பு போன்ற பல வழக்குகளை சிபிஐ விசாரித்துள்ளது. சில முக்கிய வழக்குகள்: ஹர்ஷத் மேத்தா ஹவாலா பங்கு பத்திர ஊழல், போபர்ஸ் பீரங்கி கொள்முதல் ஊழல், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிதி மோசடி, உயர் காவல் அதிகாரியின் மகன் குற்றவாளியாக்கப்பட்ட பிரியதர்ஷனி மாட்டு என்ற 22 வயது சட்டக் கல்லூரி மாணவி கொலை வழக்கு, குஜராத் அமித் ஷா வழக்கு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகள் போன்றவை. நாடுகளுக்கிடையிலான குற்றப் புலனாய்வுகளில் இன்டர்போலுக்கு நிகராக சிபிஐ செயல்பட்டு வருகிறது.
குற்றச்சாட்டுகள்
சிபிஐமீது சில குற்றச்சாட்டுகளைப் பலரும் முன்வைக்கிறார்கள். குறிப்பாக, மத்திய அரசால் சிபிஐ ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்னும் குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்துகொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களையும் மாற்று முகாம்களில் இருப்பவர்களையும் மிரட்டிப் பணிய வைக்க சிபிஐ பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள் இவர்கள்.
இத்தகைய பிரச்னைகள் இருக்கக்கூடாது என்றால் சிபிஐக்குக் கூடுதல் சுதந்தரம் அளிக்கப்படவேண்டும், அரசியல் தலையீடு அகற்றப்படவேண்டும் என்கிறார் அதன் முன்னாள் இயக்குநரான ஆர்.கே. ராகவன்.
கடந்த 10 ஆண்டுகளில், குறிப்பாக 2ஜி, நிலக்கரி உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் சிபிஐயின் செயல்பாடுகள் எதிர்கட்சிகளாலும் உச்ச நீதிமன்றத்தாலும் கடுமையாக விமரிசிக்கப்பட்டுள்ளன. அரசின் கொள்கை சார்ந்த பிரச்னைகளில் பிழைகள் நேர்வதை சிபிஐ பெரிதுபடுத்தக்கூடாது என்று பிரதமர், நிதியைமச்சர் இருவரும் சமீபத்தில் சுட்டிக்காட்டியதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம்.
குவஹாத்தி தீர்ப்பு
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர் நவேந்திரகுமார், தன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்ததை எதிர்த்து குவஹாத்தி உயர் நீதிமன்றத்தில் பதிலுக்கு ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அன்சாரி, இந்திராஷா ஆகியோர் அமர்வு அளித்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் சாரம் இது. ‘மத்திய உள்துறை அமைச்சகம் 1 ஏப்ரல் 1963 அன்று நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தின் மூலம் சிபிஐ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் மத்திய அமைச்சரவையின் தீர்மானம் அல்ல. அந்தத் தீர்மானத்துக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படவில்லை. எனவே சிபிஐ அமைப்பை போலிஸ் படையாகக் கருத முடியாது. சிபிஐ குற்ற வழக்குகளைப் பதிவு செய்வது சட்ட விரோதம். மத்திய உள்துறை அமைச்சகம் 1963ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது.’
50 ஆண்டு பாரம்பரியம் மிக்க சிபிஐ என்ற அமைப்பே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆட்சியாளர்கள் அரசியலமைப்புச் சட்ட ரீதியாக சிபிஐயின் இருப்பை நிலைநிறுத்தாமல் விட்டது விமரிசனத்துக்குரியது.
தற்போது பதவி வகிக்கும் இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவின் நியமனத்தின்போது இன்னொரு சர்ச்சை எழுந்தது. அதுவும் இப்போது விவாதப்பொருளாகியுள்ளது. பிரதம மந்திரி, எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுமூலம் இனிமேல் சிபிஐ இயக்குனர் நியமனம் முடிவு செய்யப்படவேண்டும் என்றும் கூண்டுக்கிளி போல் இல்லாமல் சிபிஐக்கு சுதந்தர அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்றும் கோருகிறார்கள்.
குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. முக்கியத்துவம் கருதி தலைமை நீதிபதி பி.சதாசிவம் வீட்டிலேயே வழக்கு ஏற்கப்பட்டு விசாரணையும் தொடங்கியது. அப்போது ஆஜரான அட்டர்னி ஜெனரல் குலாம் சி. வாகனவதி வெளியிட்ட கருத்து இது.
‘சிபிஐயை நிறுவிய தீர்மானத்துக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதாலேயே அதைச் சட்ட விரோத அமைப்பு என கூற முடியாது. தில்லி சிறப்பு போலிஸ் சட்டத்தின் அடிப்படையில் பல்வேறு வழக்குகளில் சிபிஐக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பல சந்தர்ப்பங்களில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதை குவஹாத்தி நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. அதே தில்லி சிறப்பு போலிஸ் அமைப்பு சட்டத்தின் கீழ் புதிய சிறப்புக் காவல் அமைப்பை உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அந்த அதிகாரத்தைப் பல வழக்குகளில் உறுதிப்படுத்தியுள்ளது.
‘உயர் நீதிமன்ற தீர்ப்பால் சுமார் 9000 நீதிமன்றத் தீர்ப்புகள், விசாரணையில் உள்ள சுமார் 1000 வழக்குகள் பாதிக்கப்படும். சிபிஐயில் சுமார் 6000 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்தத் தீர்ப்பால் ஒட்டுமொத்த சிபிஐ காவல் கட்டமைப்பே குலைந்துவிடும் நிலை ஏற்படும். இந்தத் தீர்ப்பை பயன்படுத்தி வேறு சில வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், தற்போது வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஆதாயம் தேடக்கூடும்.’
இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதித்து விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. வேறொரு வழக்கில், உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஒரு தீர்ப்பை இங்கே நினைவுபடுத்திக்கொள்வது பொருத்தமாக இருக்கும். இந்தத் தீர்ப்பின்படி, ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படும் முறை நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும். இதில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. தற்போது, சிபிஐ விவகாரத்திலும் இத்தகைய ஒரு தீர்ப்புதான் தேவைப்படுகிறது. ஐம்பது ஆண்டு காலப் பாரம்பரியம் மிக்க சிபிஐ சட்டப்பூர்வமான ஓர் அமைப்பு என்று அறிவிக்கப்படவேண்டும். அரசியல் தலையீடுகள் அகற்றப்படவேண்டும். அனைவருடைய எதிர்பார்ப்பும் இதுதான்.
சிபிஐயின் 50 வது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், அதன் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா பேசும்போது சொன்ன ஒரு ‘பழமொழி’ பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிவிடும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
பெரும் சர்ச்சைக்குள்ளான ஐபிஎல் சூதாட்டங்களைப் பற்றிப் பேச்சு வந்தபோது ரஞ்சித் சின்ஹா இப்படிக் கூறினார். ‘விளையாட்டுகளில் நடைபெறும் முறைகேடுகளில் கோடிக்கணக்கான பணம் புரளுகிறது. ஆனால் தெளிவான ஒரு சட்டம் இல்லாத காரணத்தாலும், இவை நாடுகளுக்கு இடையே நடக்கும் குற்றங்களாக இருப்பதாலும் மத்தியப் புலனாய்வுத் துறையால் சரியான நடவடிக்கை எடுக்க முடிவதில்லை’. மேலும் தொடர்ந்தார். ‘சூதாட்டங்களைத் தடை செய்யவென்று இருக்கும் சட்டங்களை அமல்படுத்த முடியவில்லை என்று சொல்வது ‘கற்பழிப்புக் குற்றங்களைத் தவிர்க்க முடியவில்லை என்றால் அதைத் துய்த்து மகிழுங்கள்’ என்பதைப் போல இருக்கிறது’.
இந்தக் கடைசி வாக்கியம்தான் தேசிய பெண்கள் அமைப்பை கொதித்து எழச் செய்துவிட்டது. ‘மத்தியப் புலனாய்வுத்துறை இயக்குநரின் பேச்சு, ‘சூதாட்டத்தைப் போலவே கற்பழிப்பு என்பதும் மாற்றமுடியாத சமூக நிகழ்வு’ என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவரின் வாயிலிருந்து இந்த மாதிரி பொறுப்பற்ற, உணர்வுபூர்வமற்ற, ஆட்சேபத்திற்குரிய பேச்சுகள் வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. தனது பேச்சுக்கு விளக்கமும், அப்படி பேசியதற்கு மன்னிப்பும் அவர் கேட்டே ஆக வேண்டும் என்று அந்த அமைப்பு கூறுகிறது.
‘நம் நாட்டில் லாட்டரி சீட்டுக்கள் இருக்கின்றன, ஓய்வு விடுதிகளில் சூதாட்டக்களங்கள் இருக்கின்றன; கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் தங்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை சட்டபூர்வமாக அறிவிக்கலாம் என்றெல்லாம் அரசாங்கமே சொல்லும்போது, பெட்டிங் என்பதையும் சட்டபூர்வமாக்கி விடலாம். சூதாட்டங்களை ஒழித்து விடவேண்டும் என்று சொல்வது மிகவும் சுலபம். அதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்துவது கடினம்’ என்றெல்லாம்கூட ரஞ்சித் சின்ஹா பேசியிருக்கிறார்.
தேசிய பெண்கள் அமைப்பு கேட்டுக்கொண்டதன் பேரில் சின்ஹா மன்னிப்பு கேட்டிருக்கிறார். ‘என்னுடைய உரை யாருடைய மனத்தையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன், மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். நான் எப்போதும் பெண்களிடம் மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்திருக்கிறேன். மத்தியப் புலனாய்வுத் துறை பல கற்பழிப்புக் குற்றங்களை விசாரித்து இருக்கிறது; எங்களிடம் வரும் குற்றங்களையும் பெண்களின் நிலையை மனத்தில் வைத்துக் கொண்டே விசாரித்திருக்கிறேன்.
‘லாட்டரி சட்டபூர்வமாக ஆக்கப்பட்டதைப்போல பெட்டிங்கையும் ஆக்கலாம்; பெட்டிங்கை தடை செய்யும் சட்டங்களை அமல்படுத்துவது கடினம். அதனால் பெட்டிங்கை தடை செய்யமுடியவில்லை என்று சொல்வது தவறு என்று வலியுறுத்த ஒரு பழமொழியை பயன்படுத்தினேன். அவ்வளவுதான். எந்தச் சூழ்நிலையில் அப்படிச் சொன்னேன் என்று பாருங்கள்.’

நன்றி - ஆழம் மாத இதழ் (எனது பதிவு)

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_5.html) சென்று பார்க்கவும்... நன்றி...