Wednesday, November 6, 2013

நீயா- நானா ?


தன்முனைப்பினால் (EGO) எழும் விளைவுகள்

  சில மாதங்களுக்கு முன்பாக THE HINDU ஆங்கில நாளிதழில் முதன்மை ஆசிரியர் மற்றும் நிர்வாக குழுமத்தில் திரு என்.ராம்-ற்கு பதிலாக திரு சித்தார்த் வரதராஜன் பொறுப்பேற்றபின் சில நாட்களில் செய்திகளின் அச்சு வடிவமைப்பில் (LAY OUT - DESIGNING - PROVIDING SHORT CAPTIONS)குறிப்பிட்ட தலைப்புகளுக்கு பக்கத்தில் கலர் கட்டத்தில் குறியீட்டுச் சொல் குறித்து காண்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  சில வடிவமைப்பு மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டது.  பலரால் அது வரவேற்கப்பட்டது.  ஒரே மாதிரி பார்த்துப் பழகிய சிலர் எதிர் கருத்தும் தெரிவித்தனர்.
 
  ஆனால் அதற்கு முன்பு- அன்று- இன்று எல்லா நாட்களிலும் செய்தியாளர்களில் மாற்றம் ஏதும் இல்லாததால் ஆங்கில எழுத்து நடைகளில் மாற்றமின்றி சிறப்பாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  இந்நிலையில் சமீபத்தில் முதன்மை ஆசிரியர் குழுமத்தில் திரு என்.ராம் பொறுப்பேற்று- அதனை தொடர்ந்து திரு சித்தார்த் வரதராஜன் ராஜினாமா போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது.  அது அவர்களின் உள் நிகழ்வு விவகாரம்.
 
  ஆனால் இன்றைய THE HINDU முதல் பக்கம் வலது மூலையில் "மீண்டும் பழைய பொலிவான வடிவமைப்பிற்கு திரும்பியுள்ளோம்" என கட்டம் கட்டி  குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஆட்சியமைப்பை, துறைவாரியான நிர்வாகத்தை, நீதித்துறையை இப்படி எவருடைய செயல்பாட்டையும் விமர்சிக்கும் தகுதிபடைத்த பத்திரிகையாளர்களிடையே இப்படி தனி மனித "தன் முனைப்பு (ஈகோ)" தலைதூக்கி முன்பிருந்தவர் செய்ததையெல்லாம் மாற்றுவேன் என தலைப்பட்டால், 5 வருடங்களுக்கொருமுறை ஆட்சி மாற்றத்தின் போது முன்னவர் செய்த பெரும்பாலான கொள்கை முடிவுகளை புதிய ஆட்சியாளர்களால் மாற்றப்படும் போது அதை எவ்வாறு விமர்சனம் செய்ய இயலும்?

  இந்து நாளிதழின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்ய விரும்பினால் செய்துவிட்டு போயிருக்கலாம்.  அதை கட்டம் கட்டி சொல்லி காண்பிக்கும் போது "தன் முனைப்பு (ஈகோ)" வெளிப்படையாக தெரிகிறது. "இடது" சிந்தனையாளர் என எண்ணப்படும் மூத்த பத்திரிகையாளரிடம் இது வெளிப்படுவது வேதனைக்குரிய ஒன்றே !!

Monday, May 27, 2013

100 கோடி ஜனநாயகம்

100 கோடி ஜனநாயகம்கர்நாடகத்தின் சட்டப்பேரவைக்கு 2013 மே முதல் வாரம் தேர்தல் நடைபெற உள்ளது.  முன்பெல்லாம் ஆட்சி அதிகாரத்துக்கு யார் வரவேண்டும் என்று சாராய வியாபாரிகளும் தரகர்களும் திரை மறைவில் இருந்து தீர்மானித்தார்கள். அதன் பிறகு கார்ப்பரேட் முதலாளிகள் யார் எந்தத் துறையின் அமைச்சராக வரவேண்டும் என்பதைத் தீர்மானித்தார்கள். இப்போது அனைத்தும் மாறிவிட்டன. பணம் படைத்த முதலாளிகள் நேரடியாகவே அரசியலுக்கு வந்துவிடுகிறார்கள். சில கோடிகளை முதலீடாக விதைத்து 5 வருட பதவி காலத்தில் ஏராளமான கோடிகளை அறுவடை செய்துவிடுகிறார்கள்.
கர்நாடகாவின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் பல வேட்பாளர்கள் அவர்களாக மனமுவந்து தாக்கல் செய்துள்ள விபவங்களின் அடிப்படையில் மட்டும் பார்த்தாலே 10 வேட்பாளர்கள் ரூபாய் நூறு கோடி தாண்டி சொத்து சேகரித்து வைத்துள்ளார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் வீடு, மனை விற்பனையாளர்கள் (ரியல் எஸ்டேட்), சுரங்கத் தொழில் புரிவோர், கல்வி நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர் நேரடியாகவே அரசியலில் களத்தில் இறங்கியுள்ளனர்.  யார் வேட்பாளராக களம் இறங்க வேண்டுமென்பதை அவருடைய சொத்து மதிப்பைக் கொண்டுதான் அனைத்து கட்சிகளும் முடிவுசெய்கின்றன.
சுரங்கம்
பெல்லாரி, தும்கூர் மாவட்டங்களில் பெருமளவில் இரும்பு தாது வெட்டி எடுக்கப்படுகிறது. இருப்பினும் 2010 &11ல் கர்நாடகா லோக்யுக்தா விசாரணை, உச்ச நீதிமன்ற கெடுபிடிகள் போன்றவற்றால் சுரங்கத் தொழில் சற்று சுணக்கம் கண்டிருந்தது.  பல்லாயிரம் கோடி வருவாய் தரும் தொழில் என்பதோடு பல்லாயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. இந்த மாநிலத்தின் சுரங்க ஜாம்பவான்கள் ஜி ஜனார்த்தன ரெட்டி (தற்போது ஹைதராபாத்தில் நீதிமன்ற காவலில் உள்ளார்), அனில் லாட், சந்தோஷ் லாட் ஆகியோர் நேரடியாக அரசியலில் ஈடுபடுகின்றனர். இதில் சந்தோஷ் லாட் என்பவரின் சொத்து மதிப்பு ரூ 186.40 கோடி
கல்வி
கல்வி நிறுவனம் என்பது பணம் கொழிக்கும் தொழிலாகிவிட்டது. கர்நாடகாவில் பல அரசியல்வாதிகள் சங்கிலித் தொடராக கல்வி நிறுவனங்கள் வைத்துள்ளனர். ஏறக்குறைய பெரிய அளவிலான ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் அனைவருடைய பெயரிலும் கல்வி நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.
ரியல் எஸ்டேட்
சுரங்கத் தொழில் தொய்வடைந்ததைத் தொடர்ந்து அதிலுள்ள கோடிகள் ரியல் எஸ்டேட்டில் பாய ஆரம்பித்தது. குறிப்பாக பெங்களூரு, மைசூர், மங்களூர், தும்கூர், ஹாசன் மற்றும் ஷிமோகா ஆகிய இடங்களில் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தார்கள். நில மதிப்புகள் பெங்களூருவில் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள நகரங்களிலும் அதிகரித்தது. விவசாயமற்ற நிலத்தின் மதிப்பு பெங்களூருவில் குறைந்தபட்சம் சதுர அடிக்கு ரூ.1500 முதல் அதிகபட்சம் அது அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து லட்சம் வரை விலை போகிறது.
பல ரியல் எஸ்டேட் முதலாளிகள் ஏற்கெனவே அரசியலில் உள்ளனர். எம்.கிருஷ்ணப்பா (லே அவுட் கிருஷ்ணப்பா) நந்தீஷ் ரெட்டி, சதீஷ் ரெட்டி, கிருஷ்ண பலேமர் ஆகியோர் தங்கள் அதிர்ஷ்டத்தை மீண்டும் ஒருமுறை சோதித்துப் பார்க்க களம் இறங்கியுள்ளனர்.
சாராயம் மற்றும் சுரங்கத் தரகு வியாபாரத்துக்கு மாற்றாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானப் பணிகள் அமைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நந்தீஷ் ரெட்டி தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு ரூ.107.05 கோடி
  • காங்கிரஸின் ப்ரியா கிருஷ்ணா ரூ.910.98 கோடி
  • பாஜக ஆனந்த் சிங் ரூ.104.50 கோடி
  • ஜனதா தளம் (மதச்சார்பற்றது) ஹெச் டி குமாரசாமி ரூ.123.02 கோடி
  • காங்கிரஸின் ஆர்வி தேஷ் பாண்டே ரூ.113.93 கோடி
தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அனைவரும் களத்தில் உள்ளனர்.  காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம் (மதச்சார்பற்றது) ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களில் பலர் ரூ. 10 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு காண்பித்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் கடுமையாகக் கண்காணித்தபோதிலும் அவர்கள் கண்களுக்கு படாதவாறு இலவசங்களும் பணம் கொடுப்பதும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த நடைமுறைகளால் ஒரு சாதாரண வாக்காளர்கூட பணம் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார். மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள், அதிலிருந்து சிறிது கொடுத்தால் அதைப் பெறுவதில் என்ன தவறு என்றும் வாக்காளர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
2008 தேர்தலுக்கு பிறகு பாஜக தனிப் பெரும்பான்மைக்கு 5 இருப்பிடங்கள் குறைவாக (224 இடங்களில் 110ல் வெற்றி பெற்றது) கைப்பற்றியபோது, 9 வேட்பாளர்கள் சுரங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்தார்கள். பாஜக தன்னுடைய பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக தாமரை திட்டம் என்று களம் இறக்கி எதிர்கட்சி உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து. அவர்களுக்கு கட்சியில் வாய்ப்பு கொடுத்து இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்தது.  இதன் பின்னணியில் முழுமையாக ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்க முதலாளிகள் இருந்தனர்.
28 கோடி மக்களுக்கு மேல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ரூ. 3075 கோடி. இந்தியாவில் 80% மக்கள் ஒரு நாளைக்கு ரூ.100 க்கும் குறைவான வருமானம் பெறுகிறார்கள். ஆனால் எம்.பிக்களின் சராசரி சொத்து மதிப்பு 5 கோடிக்கு மேல். 2009ல் தேர்வு செய்யப்பட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 300க்கு மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள்.
பணத்தின் அதிகாரம் கர்நாடகாவில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.  இருப்பினும் 2004 தேர்தலில் அது முடிவெடுக்கும் சக்தியாக அமைந்தது.  2004 தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாமல் காங்கிரஸ்  65, பாஜக 79, ஜனதாதளம் (ம.சா) 58 என இடங்கள் கிடைத்தன.  அதன் காரணமாக அதிகாரம் மாறுவதும், முதல்வர் மாறுவதுமாக இருந்தது.
அதன் பிறகு ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்கத் தொழில் முதலாளிகள் நேரடியாக அரசியலில் இறங்க ஆரம்பித்தனர். தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் 16 லட்சம்தான் செலவழிக்கவேண்டும் என தெரிவித்திருப்பது கேலிக்கூத்து என்கிறார்கள் இத்தகைய கோடீஸ்வர வேட்பாளர்கள்.
வருமான வரி நெருக்கடி என்பதெல்லாம் சாதாரண சம்பளம் பெறுவோருக்குத்தான்.  இத்தகைய கோடீஸ்வரர்களை யாரும் நெருங்கமாட்டார்கள். எப்போதாவது பழி வாங்கும் நோக்கில் இவர்கள்மீது பாய்ந்தால்தான் உண்டு. அதுவும்கூட மறக்கடிக்கப்பட்டுவிடும்.

நன்றி - ஆழம் - சித்ரகுப்தன்

Wednesday, March 13, 2013

வறட்சியிலும் சூடுபிடிக்கும் தண்ணீர் வியாபாரம்


"எப்போது தண்ணீர் பணமாய் கொட்டும்"

"ஒருபுறம் ஓட்டுக்கட்சி ஜனநாயகத்தில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் ஜனநாயகத்தை இயக்க வைக்கும் அடக்க விலை மட்டும் 50000 கோடி ரூபாய் என்கிறது ஒரு பார்வை (தினமணி / 5 மார்ச் /மக்களாட்சியின் அடக்கவிலை).  மறுபுறம் இத்தகைய ஆட்சியாளர்களின் முறையற்ற திட்டங்களால், தனியார் முதலாளிகள் வறுமையையும் காசாக்கி கொழுக்கின்றனர் என்பதை தோலுரித்துக் காட்டுகிறது இந்த கட்டுரை"

பரத்ரவுத் ஒவ்வொரு மாதமும் அவருக்கு தேவையான தண்ணீரை சேகரிப்பதற்காக பெட்ரோலுக்கு ரூ 800 செலவழிக்கிறார்.  மராத்வாடா மாநிலம், உஸட்மானாபாத் மாவட்டத்திலுள்ள டாக்விகி கிராமத்தில் இதே போல் பலர் செலவழிக்கிறார்கள்.  டாக்விகி மற்றும் இதர கிராமங்களில் ஒரு வீட்டிற்கு ஒருவர் வீதம் வெளியில் சென்று எங்கிருந்து தங்களால் தண்ணீர் சேகரித்து வரமுடியுமோ அங்கிருந்து எடுத்துவரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  உஸ்மானாபாத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்து விதமான வாகனங்களும் எங்கிருந்தாவது தண்ணீர் சேகரித்து வரும் பணியை மேற்கொண்டிருப்பதை பார்க்கலாம்.  அவை சைக்கிள்கள், இரு சக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகள், ஜீப்கள், லாரிகள், வேன் மற்றும் டேங்கர்கள் ஆகும்.  பெண்கள் தலையில், இடுப்பில், தோள்களில் பானைகளை சுமந்து செல்வதை பார்க்க முடியும்.  கடுமையான வறட்சியிலிருந்து மீண்டு உயிர் வாழ்வதற்காக பெரும்பான்மை யானவர்கள் இந்த தண்ணீர் பிடிக்கும் பணியை செய்து வருகின்றனர். வேறு சிலரோ இதில் தெளிவாக லாபம் சம்பாதிக்கின்றனர்.

காலமும் தொலைவும்
 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயி பரத் கூறுகிறார், ஆம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் முழுநேரமாக தண்ணீர் எடுத்துவரும் பணியை மேற்கொள்கின்றனர்.  என்னுடைய குடும்பத்தில் நான் எனது சொந்த நிலத்திலுள்ள ஆழ்துளை கிணற்றில் சீரான இடைவெளியின்றி அவ்வப்போது கிடைக்கும் தண்ணீரை எடுத்து வருவேன் என்று கூறுவதோடு, அவர் வீட்டிற்கும் அந்த இடத்திற்கும் இடையே தொலைவு 3 கி.மீ.க்கு மேல் என்கிறார்.  எனவே 4 பிளாஸ்டிக் குடங்களை தனது ஹீரோ ஹோண்டா வாகனத்தில் வைத்து ஒரு முறைக்கு 60 லிட்டர வீதம் 4 நடை சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்.  "நான் அங்கு சென்று எங்கள் ஆழ்துளை குழாயில் கிடைக்கும் சொற்ப தண்ணீரை எடுத்து வருகிறேன், பயிர்களெல்லாம் நீரின்றி மடிகிறது" இந்த  கிராமத்தில் 25 ற்கும் மேற்பட்ட மோட்டார் இரு சக்கர வாகனங்கள் இதே பணியாக எந்நேரமும் சுற்றித் திரிவதை பார்க்கலாம் என்கிறார்.ஒவ்வொரு சுற்றும் ஏறக்குறைய 6 கி.மீ. என்பதால் பரத்தின் பணி என்பது தினமும் 20 கி.மீ. அல்லது மாதத்திற்கு 600 கி.மீ என்ற அளவில் முடிகிறது.  அதாவது 11 லிட்டர் பெட்ரோல்- ஏறக்குறைய 800 ரூபாய் இதற்காக மட்டும் செலவழிகிறது.  தண்ணீர் கிடைக்கும் நேரம் ஒவ்வொரு வாரமும் மாறிக் கொண்டிருக்கும் என்கிறார், அரசு கட்டுப்பாட்டிலுள்ள நிலையத்திற்கு சென்று வரும் அஜய் நிசூர்.  இந்த வாரம் மின்சாரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும், எனவே அந்த நேரத்தில் தண்ணீர் எடுத்து வருவோம்.  அடுத்த வாரம் நள்ளிரவிலிருந்து காலை 10 மணி வரை என மாறும் என்கிறார்.  அவர் தனது சைக்கிளில் 6, 7 குடங்களை கட்டிக் கொண்டு 2 - 3 கி.மீ. தொலைவிலான நடைகளை மேற் கொள்கிறார்.  அதனால் ஏற்படும் தோள்வலிக்காக இருமுறை உள்ளூர் மருத்துவ மனைக்கு சென்று வந்துள்ளார்.
நிலமில்லாமலிருக்கும் தொழிலாளர்கள் முதலாளிகளின் மூலம் சிரமத்தை சந்திக்கின்றனர்.  சில நேரம் மிகுந்த தாமதம் ஏற்படும், சில நேரம் (நீர்) ஒன்றுமே கிடைக்காமலும் திரும்ப நேரிடும் என்கிறார் ஜாம்பர்யாதவ்.  அந்த தாமதத்தால் வீட்டிலுள்ள கால்நடைகளுக்கு உணவளிப்பது தாமதப்பட்டு மோசமான நிலை ஏற்படும்.  இன்னும் 5 மாதங்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்கிறார் ஜாம்பர்.  ஏற்கனவே இந்த காலை நேரத்தில் தனது சைக்கிளில் 6 குடங்களை வைத்துக்கொண்டு இரண்டு நடைகள் முடித்துள்ளார் அவர்.
பெண்களை பாதிக்கும் சிரமம்
டாக்விகி கிராமத்தில் இரண்டு, மூன்று பானைகளை சுமந்து கொண்டு பெண்கள் நடந்தே பல முறை தண்ணீர் சுமக்கிறார்கள்.  அத்தகைய நீர் கிடைக்கும் இடத்திலிருந்து தண்ணீர் சுமந்து வர ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 மணி நேரம் அவர்கள் அந்த பணியை மேற்கொள்ள நேரிடுகிறது.  மேலும் அவர்கள் கூறும் போது ஒரே தண்ணீரையே மறு உபயோகப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.  முதலில் குளித்தபின், அதே தண்ணீரை கொண்டு துணிகளை துவைத்துவிட்டு, மீண்டும் அந்த நீரை பாத்திரங்கள் கழுவ பயன்படுத்துவோம் என்கின்றனர்.  ஆண்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுவரும் தூரத்தை விட அதிகமான தூரம் இங்குள்ள பெண்கள் நடந்து தண்ணீர் சுமக்கின்றனர்.  அவர்கள் ஏறக்குறைய 15- 20 கி.மீ. நடப்பதோடு, அதனால் அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர்.
புல்வந்திபாய் தாபே போன்ற பெண்கள் மிக மோசமாக பாதிக்கப் படுகின்றனர்.  அவர் ஒரு தலித் இனத்தவர் என்பதால் பெரும்பாலான தண்ணீர் கிடைக்கும் இடங்களில் அவர் தண்ணீர் பிடிக்க அனுமதிக்கப்படமாட்டார்.  அரசாங்கத்தால் வெட்டப்பட்டுள்ள கிணறுகளில் கூட நான் வரிசையில் கடைசியாகத்தான் நின்று தண்ணீர் எடுக்க முடியும் என்கிறார் அவர்.


கரும்பு விவசாயமும் மழையும்
பற்றாக்குறை என்பது வாழ்நிலையையும் பாதிக்கிறது.  தண்ணீர் பற்றாக்குறையால் என்னைப் போன்று ஒன்றிரண்டு மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்வதும் சிரமமாகிவிடுகிறது.  என்னைப் போலவே எனது மாடுகளும் சிரமப்படுகின்றன.  நான் ஒரு நாளைக்கு பால் வியாபாரத்தின் மூலம் ரூ 300 சம்பாதிக்கிறேன் என்கிறார் சுரேஷ்வேட்பதக்.  தற்போது பெற்று வந்த பால் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது என்கிறார் அவர்.
உஸ்மானாபாத்தில் உள்ள டாக்விகி கிராம மக்கள் பல பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.  இங்கு 4000 ற்கும் குறைவான மக்கள் உள்ளனர்.  பாசனத்திற்கு 1500 க்கும் குறைவான ஆழ்துளை கிணறுகள் உள்ளது. தற்போது 550 அடிக்கும் கீழே துளையிட வேண்டியுள்ளது என்கிறார் பரத் ரவுத்.  இந்த வறட்சி பாதித்த பகுதியின் முக்கிய பயிர் கரும்பு ஆகும்.  எங்களது தேவையான சாதாரண மழை அளவு என்பது 767 மி.மீ. என்ற நிலையில் கடந்த பருவத்தில் 397 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது என்கிறார் உஸ்மானாபாத் மாவட்ட ஆட்சியர் கே.எம்.நாகர்கோஜே.  800 மிமீ மழை என்பது மோசம் என கூற முடியாது, ஏனெனில் பல பகுதிகள் 400 மிமீ மழைதான் பெற்றுள்ளது என்கிறார் அவர் மேலும் கூறுகையில்.
800 மிமீ மழை பெய்தால் கூட 2.6 மெட்ரிக் டன் கரும்பு உற்பத்திக்கு அது போதாது.  ஒரு பயிரிடலுக்கு ஒரு ஏக்கருக்கு 18 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை (அதாவது ஒலிம்பிக் பந்தயங்களில் பயன்படுவது போன்ற    7 1/2 நீச்சல் குளங்களுக்கு சமமானது) டாக்விகி கிராமத்தில் சொட்டு நீர் பாசன முறையால் தண்ணீரை சேமிப்பவர்கள் மிகச் சிலரே.
மாவட்ட ஆட்சியர் நாகர்கோஜே மிக சிக்கலான பிரச்சனையை கையில் வைத்துள்ளார்.  நிலத்தடி நீர்  அரசுத் துறையில் உள்ள புள்ளி விபரங்களின்படி மிகக் குறைவாகவே உள்ளது.  அந்த மாவட்டத்தின் பெரிய, சிறிய நீர் திட்டங்கள் அனைத்திலும் தண்ணீர் இருப்பு ஏறக்குறைய "இல்லை" என்ற நிலைக்கு வந்து விட்டது.  மோட்டார் போன்ற சாதனங்களால் மேலே கொணர இயலாத சொற்ப அளவு என்பது சில மீன்களை உயிர்வாழ வைக்க மட்டுமே பயன்படும் விதமாக உள்ளது.  அந்த மாவட்டத்தின் சிறிய திட்டங்களின் மூலம் 3.45 மில்லியன் மெட்ரிக் சுற்று அடி அளவு மட்டுமே கையிருப்பு உள்ள நீரைக் கொண்டு சில நாட்கள் 1.7 மில்லியன் மக்களுக்கு வழங்க இயலும்.  அந்த மாவட்டத்தில்  தனியார் ஆழ்துளை கிணறுகள் மூலம் பாசனத்திற்கு நீர் வழங்குவதென்பது மிக வேகமாக அதிகரித்து வருகிறது.  இந்த மாவட்டத்தில் ஜனவரி நிலவரப்படி நிலத்தடி நீர் அளவு 10.75 மீட்டர்.  கடந்த 5 ஆண்டு சராசரியைவிட 5 மீட்டர் குறைவு.  சில பகுதிகளில் அதற்கும் குறைவாகவே உள்ளது.  இருப்பினும் அவர் இந்த ஆண்டு இந்த இருப்பை வைத்துக் கொண்டு நிலைமையை சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளார்.  இருப்பினும் தற்போதுள்ள பயிர் விளைச்சலை பார்க்கிற போது அடுத்த வருடம் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அவர் அறிந்து வைத்திருக்கிறார்.
தனியாரின் வணிக ஆட்சி
டாக்விகியில் வருவாய் குறைந்து வருவதால் கடனாளிகள் அதிகரித்து வருகின்றனர்.  இங்கு ரூ 100 க்கு ஒரு மாதத்திற்கு ரூ 5 முதல் 10 வரை கந்து வட்டிக்காரர்களால் வட்டி வசூலிக்கப்படுகிறது என்கிறார் சந்தோஷ்யாதவ்.  அதாவது வருடத்திற்கு 60 முதல் 120 சதவீதம் வரை.  யாதவின் குடும்பத்தினர் மட்டும் ஆழ்துளை குழாய் பதிப்பில் ஏறக்குறைய ரூ 10 லட்சம் வரை செலவழித்துள்ளார்.  இருப்பினும் அவையாவும் வறண்டுவிட்டன.  வெயில் காலம் வெகு தொலைவில் இல்லை.  ஆனால் யார் அதைப்பற்றி எண்ணுகிறார்கள், அன்றாடம் கழிந்தால் போதும் என உழல்கின்றனர் என்கிறார் யாதவ்.
ஆனால் ஒருபுறம் வறட்சியை எதிர்த்து பலர் போராடி வருகையில், மறுபுறம் பற்றாக்குறையை பயன்படுத்தி தண்ணீர் வியாபாரம் பரபரப்பாக நடந்து வருகிறது.  இது எங்கு பார்த்தாலும் வெளிப்படையாக தெரியும்.  சமூக பணியாளர் பாரதி தாவாலே கூறுகையில் நாள் முழுவதும் நாங்கள் கைபேசி மூலம் எங்கிருந்து தண்ணீர் வாங்கலாம் என்பதற்காக பேசிக் கொண்டிருப்போம் என்கிறார்.  அது போல் ரூ 120 க்கு 500 லிட்டர் தண்ணீர் என்று ஒருவரிடம் விலை பேசியிருந்தேன்.  ஆனால் அவர் வரும் வழியிலேயே மற்றொருவருக்கு அதே அளவை ரூ 200 க்கு விற்றுவிட்டார்.  நான் பல முறை கேட்ட பிறகு முதல்நாள் தேவைக்கு கேட்டதை மறுநாள் இரவு 9 மணிக்கு கொண்டுவந்து கொடுத்தார்.  அதன்பிறகு நான் அருகில் இருப்பவரிடமே வாங்க துவங்கிவிட்டேன் என்கிறார்.
அந்த மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் விறுவிறுப்பாக தண்ணீர் வியாபாரம் நடைபெற்று வருகிறது.  பற்றாக்குறை அதிகரித்திருக்கும் போது விலை ஏறுகிறது.  அரசு 720 ஆழ்துளை கிணறுகளை குத்தகைக்கு எடுத்து அதன் உரிமையாளர்களுக்கு பிரதிமாதம்  ரூ 12000 வீதம் அளிக்கிறது.  அங்கு பொது மக்களுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்க வேண்டும்.  ஆனால் நெடுந்தொலைவு, மற்றும் கூட்டம் அதிகமிருப்பதால் அங்கு தண்ணீர் பெறுவது சிரமமான ஒன்றாகிவிடுகிறது.  அங்கு தண்ணீர் தனியார் கட்டுப்பாட்டில் வந்து விடுகிறது.  அவர்களிடம் பேரம் பேசி 500 லிட்டர் ரூ 200 கொடுத்து வாங்க வேண்டியதாகிறது.  நீங்கள் குறைவாக வாங்கினால் விலை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும்.  வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமடையும்.  ஒவ்வொரு குடியிருப்பிலும் ஒருவர் ஆழ்துளை கிணறை வைத்துக் கொண்டு பற்றாக்குறையை பயன்படுத்தி பால் வியாபாரம் போல் தண்ணீர் வியாபாரம் செய்து வருகின்றனர்.  இங்கு தண்ணீர் பணமாக கொட்டுகிறது.

நன்றி - தி இந்து - தமிழில் - எஸ்.சம்பத்

என்று மடியும் இந்த கொத்தடிமை முறை ?


என்று மடியும் இந்த கொத்தடிமை முறை ?
 அனுமேகா யாதவ் / தமிழில் எஸ்.சம்பத்

(கடனால் நெறிபடும் கோட்டா மாவட்ட கொத்தடிமைகள் என்ற தலைப்பில் தி இந்து நாளிதழில் 19 பிப்ரவரி 2013 அன்று வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)
கடன் எனும் சுத்தியலால் இடி - ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்ட கல்குவாரியில் குடும்பத்தோடு கொத்தடிமையாக பணிபுரியும் பாபுலால் கைர்வா
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் கிரானைட் கல் குவாரியில் சாம்பல்-பழுப்பு நிற பலகை கற்களின்  மீது சூரிய ஒளி அஸ்தமிக்கும் நேரம்.  பாபுலால் கைர்வா, குவாரியின் விளிம்பில் அமர்ந்து கொண்டு கல்லின் மேல் டான்கி என்ற பெரிய அளவிலான நகம் போன்ற உளியை வைத்து சுத்தியலால் முனைப்பாக தட்டிக் கொண்டிருக்கிறார்.  பாபுலால் அந்த கல் நேர் கோடாக உடையும் வரை தட்டிக் கொண்டிருப்பார்.  ஒவ்வொரு 2 க்கு 10 சதுர அடி அளவில் பலகை போன்று காலடிக்கு பதிக்கும் கல் சந்தையில் ரூ 1600 வரை ஈட்டித் தருகிறது.  ஆனால் 38 வயதாகும் அந்த தொழிலாளிக்கு எந்த கூலியையும் பெற்றுத் தருவதில்லை.
"நான் இந்த குவாரியின் முதலாளி பகதூர் பாபுவிடம் 5 வருடம் முன்பாக ரூ 10000 கடன் பெற்றேன்.  அவர் தற்போது எனது கடன் இரட்டிப்பாகியுள்ளது என்கிறார்.  அவர் எனக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 500 கூலியாக குடும்ப செலவிற்காக கொடுக்கிறார், வருட இறுதியில் முந்தைய கடனுக்காக அதை சரிக்கட்டிக் கொள்கிறார்" என்கிறார் அந்த தொழிலாளி.  அந்த கல் நேர் கோட்டில் உடையவில்லையென்றால், அவர் முதலிலிருந்து மீண்டும் உடைக்கத் துவங்க வேண்டும்.  அவரின் மனைவி ஹீராபாய் மற்றும் மூன்று மகள்கள் கற்களை சுமப்பதில் அவருக்கு உதவியாக இருக்கின்றனர். "கடன் வருடந்தோறும் அதிகரிக்கிறது, நான் ஒரு  ரூபாயை கூட கையில் பெறுவது கிடையாது.  நான் என் கிராமத்திற்கு ஓடிவிட்டால், குவாரி உரிமையாளர் ஜீப்பிலோ, மோட்டார் சைக்கிளிலோ வந்து என்னை மீண்டும் அழைத்து வந்துவிடுவார்" என்கிறார் அவர்.
அரிய வகை கடப்பா (சேண்ட் ஸ்டோன்) கல் உடைக்கும் குவாரிகள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்ட எல்லையிலிருந்து ராஜ்புரா - தாபி என்பவற்றிற் கிடையில் 100 கி,மீ நீளத்திற்கு தொடர்ச்சியாக அமைந்துள்ளது.  பெரும்பாலான கற்கள் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலத்தில் கட்டிட பணிகளுக்கு பயன்படுகிறது.  கடந்த சில வருடங்களாக அவை சவுதி அரேபியாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  கோட்டாவில் கற்கள் வாங்க வந்திருக்கும் பாடக்சிங் "குவாரியின் அளவிற்கேற்ப அவர்களின் ஆண்டிறுதி லாபம் என்பது ரூபாய் ஐந்து கோடி வரை இருக்கும் என்கிறார்".  இங்கே கிடைக்கும் இந்த அரிய வகை கற்கள் கையால் செதுக்கித்தான் உடைக்க வேண்டும், இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது என்கிறார் வடக்கு ராஜஸ்தானை சேர்ந்த கற்கள் வாங்கி, விற்கும் வியாபாரி ஓம் பிரகாஷ் அகர்வால்.
பாபுலால் கைர்வா குடும்பத்துடன் சேர்ந்து 5 தொழிலாளிகள் அந்த குவாரியில் உள்ளனர்.  மிகப் பெரிய குவாரி என்பது நேவாஜி குஜ்ஜார் என்பவருக்கு சொந்தமாக உள்ளது.  அதில் 400க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர்.  பெரும்பாலான தொழிலாளர்கள் மேற்சொன்னவாறு கடன் பெற்று அதை அடைக்கும் வகையில் கொத்தடிமைகளாகத்தான் உள்ளனர்.  நான் இங்கு என் குடும்பத்துடன் 9 வருடம் முன்பாக வந்தபோது ரூ 20000 முன்பணமாக பெற்றேன்.  அந்த வருட முடிவில் குவாரி உரிமையாளர் எனது கடன்  ரூ 24000 என கூறியதாக சொல்கிறார் ஜேட்கா சாஹேப்.  அவர் ஒவ்வொரு 2 - 3 வாரத்திற்கொரு முறை கூலி  ரூ 400 லிருநது 500 வழங்குவதாக சொல்கிறார்மத்தியப் பிரதேசம், ஜாபுனா மாவட்டத்திலிருந்து வரும் தொழிலாளி மங்கள்ராமா. 

பாலைவனமாய் போன கிராமம்

பாபுலால் கைர்வாவின் கிராமத்திலிருந்து 150 கி.மீ. தொலைவிலுள்ள பாரன் மண்டலத்தில் கிஷ‌ன்கைஞ்ச் பகுதியில் கிராமமே பாலைவனம் போல் வெறுமையாக இருக்கிறது.  அங்கிருந்து 500ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு, நிலங்களை இழந்து தீபாவளி முடிந்து கோட்டாவிலுள்ள குவாரிகளுக்கு சென்று விட்டனர்.  அவர்கள் மே மாதம் தான் திரும்ப முடியும்.  அந்த கிராமத்திலுள்ள முதியவர்கள் அங்கிருந்த கைர் என்ற மரத்தின் காரணமாக அவர்கள் குடும்ப பெயர் கைர்வா என அமைந்ததாக கூறுகின்றனர்.  நாங்கள் அந்த மரங்களை வெட்டி உருப்படிகளாக செய்து விற்போம் என விவரிக்கிறார் கணேஷ் ராம் கைர்வா.
மாநில அரசு இந்த வகை பணிகளுக்காக கைர்வாக்களுக்கு கூட்டுறவு சங்கங்களை அமைத்தது.  ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக காடுகள் அழிந்து வந்ததால், கூட்டுறவு சங்கங்களும் மூடப்பட்டன.  "தற்பேழ எல்லோரும் குவாரிகளுக்கு செல்கிறோம், எனது மகன் கடந்த 20 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து கடந்த சங்கராந்தியின் (ஜனவரி) போது ரூ 25000 கடன் என்ற நிலையில் இறந்து விட்டான்.  நான் அவனுக்கு பதிலாக பணியை தொடர இயலாத வண்ணம் வயோதிகனாக உள்ளேன் என அதன் உரிமையாளரிடம் கூறினேன்.  எனது இரண்டு மகன்களும் இந்த குவாரியில் பணிபுரிந்துள்ளனர்.  தேவராஜ், எனது இளைய மகன் அங்கு சென்றபோது அவனுக்கு வயது 18குவாரி முதலாளி எனது அந்த மகனை ஜீப்பில் திரும்ப அழைத்து வந்தார்.  தேவராஜ் அவரது முதுகில் இருந்தவன் இரத்தமாக வாந்தி எடுத்தான்.  உடனடியாக அவனை பாரூனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்" என்கிறார் ஜசோதாபாய்.
கிராமத்திலுள்ளவர்கள் பாரூன் மற்றும் கோட்டா மாவட்டத்தில் கட்டிடப் பணியில் நன்கு சம்பாதிக்கலாம், ஆனால் ஒரு முறை குவாரிக்கு சென்றவர், கடனை அடைப்பதற்காக தொடர்ந்து அங்குதான் செல்ல வேண்டியுள்ளது என்கின்றனர்.  எனது மகன் மான் சிங் குவாரியில் பல வருடம் வேலை பார்த்தான்.  கல் உடைக்கும் போது இரண்டு விரல்களை இழந்தான்.  அப்போது அவன் கணக்கில் ரூ 40000 கடன் இருந்தது.  அவன் கிராமத்திற்கு திரும்பியவுடன், துரத்திக் கொண்டே முதலாளி வந்தார்.  இரண்டு விரல்களை இழந்த நிலையில் அவனால் எப்படி பணிபுரிய முடியும் என நான் கெஞ்சியவுடன், போகட்டும் என விட்டுவிட்டனர் என்கிறார் கோர்லால்.
அரசின் அக்கறையற்ற நிலை
தெற்கு ஆசியாவிலேயே இந்தியாதான் முதன் முறையாக கொத்தடிமை முறையை, கொத்தடிமை தொழிலாளர் (ஒழிப்பு) சட்டம் 1976ன் மூலம் நீக்க முடிவு செய்தது.  சந்தர்ப்பவசமாக அவசர நிலை பிரகடன காலமான 1975 - 1977 ல் சில அதிகாரிகள் அதற்கான விதிகளை இந்திராகாந்தியின் 20 அம்ச திட்டங்களுள் ஒன்றாக முன்னிறுத்தி விவசாய தொழிலாளர்களின் கொத்தடிமை முறையை முடிவிற்கு கொண்டு வந்தனர்.
எப்போதுமில்லாத வகையில் காந்தி சமாதான நிறுவனம் 1978ல் மேற்கொண்ட ஆய்வில் 10 மாநிலங்களில் 26 லட்சம் கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளனர் எனவும் அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் ஆதிவாசிகள் எனவும், 60 சதவீதம் பேர் தலித்துக்கள் எனவும் ஆய்வு புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.  அதே வருடம் தேசிய மாதிரி ஆய்வு மையம் மேற்கொண்ட 32 வது சுற்று ஆய்வில் அலுவலக ரீதியாக 16 மாநிலங்களில் 3.43 லட்சம் கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளனர் என குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு இது குறித்து தேசிய அளவிலான ஆய்வு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.  மாநிலங்கள் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு 2012ல் அளித்த ஆய்வறிக்கையில் 18 மாநிலங்கள் கொத்தடிமை தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்தில் "இல்லை" என தெரிவித்திருப்பதான விபரத்தை தி இந்து நாளிதழ் வெளிக் கொணர்ந்துள்ளது.
ஒன்றுபட்ட நடவடிக்கைகளின் மூலம் தொழிலாளர்களுக்கு வருமான பாதுகாப்பு, உணவிற்கான  பாதுகாப்புகளை உறுதி செய்வதன் மூலம்தான் கொத்தடிமையை ஒழிக்க முடியும்.  அலகாபாத் மாநிலத்தில் குவாரிகளில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த கோல் பழங்குடியினர் ஒன்றுபட்ட நீண்ட கால போராட்ட நடவடிக்கைகளின்  மூலம் சுரங்க உரிமையை வென்றெடுத்தனர் என்கிறார் பொருளாதார நிபுணர் ரவி ஸ்ரீவத்சவா.  அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004ல் நிறுவிய முறைசாரா பிரிவுகளில் தொழில் நடத்துவோருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினரும் ஆவார்.  தற்போது பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களுக்கான குறைந்த பட்ச கூலியை கணக்கிட்டு அறியக் கூட சிரமப்படுகின்றனர்.  ஏனெனில் சட்ட ரீதியாக தேசிய அளவிலான குறைந்த பட்ச கூலி நிர்ணயம் என்பதற்கான தளம் இல்லை.  நாங்கள் அதற்கான அழுத்தமாக பரிந்துரைத்ததோடு- அவர்களின் சமூக பாதுகாப்பு- உழைப்புத்திறன், போன்றவற்றை விளக்கி அனைத்து தொழிலாளர்களுக்குமான பயிற்சி முகாம்களை நடத்துகிறோம் என்கிறார் அவர்.  ஒரு தொழிலாளிக்கு அனைத்து பிரிவுகளிலும் ஒரு நாளைக்கு ரூ 115 குறைந்த பட்ச கூலி என்ற தொழிலாளர் துறை அமைச்சகம் முன் மொழிந்தது 2009 லிருந்து தற்போது வரை நிலுவையிலுள்ளது. 
பின்ஜனா கிராமத்திலுள்ளவர் எங்களின் கடன் சுற்று என்பது அந்தந்த தொழிலாளியின் உயிர் பிரிதலோடுதான் முடியும் என்கின்றனர் வேதனையுடன்.  ஒருவர் இறந்து, அவர் குடும்பத்தில் அவரின் கடனிற்காக மாற்றாக பணிபுரிய ஒருவரும் இல்லை என்ற நிலை வரும் போதுதான் அவரின் கடனும் சாகும் என்கிறார் கோர்லால்.
இந்திய உச்ச நீதிமன்றம் கொத்தடிமை குறித்து என்ன சொல்லியிருக்கிறது?
1994 - மாநிலங்கள் உடனடியாக கொத்தடிமை தொழிலாளர்கள், அவர்களிடம் பணி வாங்கும் முதலாளிகள், ஒப்பந்தகாரர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும், காலாண்டிற்கொருமுறை உச்ச நீதிமன்ற சட்ட உதவி மையத்திற்கு அது குறித்து அறிக்கை அனுப்ப வேண்டுமெனவும் உத்திரவிட்டது.
1997 - கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு அமுல்படுத்துவதை கண்காணிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நியமிக்கப்பட்டது
2001 - தேசிய மனித உரிமை ஆணையம் திரு எஸ்.ஏ.சங்கரன் தலைமையில் நியமித்த நிபுணர் குழு மாநில அரசுகளை விமரிசித்து தனது அறிக்கையை அளித்தது.
2004 - மாநிலங்கள் அரையாண்டுக்கு ஒரு முறை தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென உத்திரவிடப்பட்டது.  மேலும், புலனாய்வு குழுக்கள் அமைக்கவும், தொழிலாளர்கள் புனரமைப்பிற்காக நிலம் சார்ந்து, குறிப்பிட்ட திறன் சார்ந்து, பணி சார்ந்து அவர்களின் விருப்பத்திற்கேற்ப பணிபுரிவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும் உத்திரவிட்டது
2010 - 2001 லிருந்து 2010 வரை கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு ஆய்வுகளுக்காக தொழிலாளர் அமைச்சகம் வழங்கிய 4.94 கோடி தொகை எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதற்கான விளக்கம் கேட்கப்பட்டது.
2012 - மாநிலங்களில் புதிதாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்பட்டு, ஆய்வறிக்கைகள் கணணி மயப்படுத்தப்பட்ட ஆவண புள்ளி விபரங்களாக வைக்கப்படவேண்டும் எனவும் உத்திரவிட்டது

நன்றி / தி இந்து ---