Friday, March 21, 2014

தேச நலனை விஞ்சும் கார்ப்பரேட் நலன்

(நன்றி- ஆழம் மார்ச் 2014 இதழ்)
கடந்த டிசம்பர் 21ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் தனது பணியை ராஜினாமா செய்தார். கட்சிப் பொறுப்பு அளிக்கப்படவிருக்கிறது அதனால் ராஜிநாமா செய்கிறேன் என்பதுதான் அவர் சொன்ன காரணம். ஆனால் அவர் பதவி விலகி பல தினங்கள் கழிந்த பிறகும் எந்தவித முக்கியக் கட்சிப் பணியும் அவருக்கு வழங்கப்படவில்லை. ஆனால் வேறு சில மாற்றங்கள் நிகழ்ந்தன.
பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதலாக அளிக்கப்பட்டது. அவர் அந்தப் பதவியை ஏற்ற 20 நாள்களுக்குள் ஏறக்குறைய 1.8 லட்சம் கோடி மதிப்பிலான 73 பெரிய திட்டங்களுக்கு வேகத்தீர்வு முறையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளிக்கப்பட்டது. மொத்தம் 38 திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம் என்றது அரசு அறிவிப்பு. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவசர கதியில் இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது ஏன்? மேலும், தற்போது மொய்லி அனுமதி அளித்த இந்தத் திட்டங்கள் பெட்ரோலிய அமைச்சரவையின்கீழும் அனுமதி பெறவேண்டியவை என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
முன்னதாக 2009ல் மத்திய திட்டக் குழு உறுப்பினர் என்.சி. சாக்சேனா என்பவர் தலைமையில் 4 நபர்கள் கொண்ட குழு ஒன்றை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நியமித்திருந்தது. வேதாந்தாவின் சுரங்கத் திட்டங்கள்மீது விசாரணை மேற்கொள்ளுமாறு இந்தக் குழு கேட்டுக்கொள்ளப்பட்டது. விசாரணையின் முடிவில், ‘வேதாந்தா சுரங்கத் திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடு’ நடந்துள்ளதாக சாக்சேனா குழு அறிக்கை வெளியிட்டது. 17 ஆகஸ்ட் 2010 அன்று வெளியான இந்த அறிக்கையில், ‘சுற்றுச்சூழல் மற்றும் வனச் சட்டங்களை வேதாந்தா தனது சுரங்கத் திட்டத்தில் பின்பற்றவில்லை’ என்றும் குறிப்பிட்டது. கூடுதலாக பழங்குடியினரின் வாழ்வாதாரமும் பாதிப்புக்கு உள்ளானதை இந்தக் குழு சுட்டிக்காட்டியது.
இது குறித்து அன்றைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை கேட்டபோது 10 நிமிடங்களுக்கு முன்பாகத்தான் நிபுணர் குழு அறிக்கை தனக்கு வந்தது என்றும் தவறு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அப்போது அவர் சொன்னது : ‘இந்த நாட்டில் துரதிருஷ்டவசமான ஒரு நடைமுறை உள்ளது. ஏதாவது ஒரு பெரிய தவறு கண்டுபிடிக்கப்பட்டால் அதிலிருந்து தப்புவதற்கு ஒரு ஜன்னல் கிடைத்துவிடும். அபராதம் செலுத்து, சென்றுவிடு!’ சில மாதங்களில் அந்த அமைச்சரவையிலிருந்து அவர் மாற்றப்பட்டார்.
சுரங்கத் தொழில் பற்றிய சர்ச்சைகள் அடங்கும்வரை வேறு ஏதாவது செய்யலாம் என்று வேதாந்தா நினைத்திருக்கவேண்டும். கெய்ர்ன் இந்தியா என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் 960 கோடி டாலர் அளவுக்கான பங்குகளை (51 சதவிகிதம்) வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. எண்ணெய் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் இது. இதைப் பற்றி அப்போது எழுதிய டைம்ஸ் ஆப் இந்தியா, மறைமுகமாக இப்படி நாட்டின் எண்ணெய் வளத்தின் பெரும்பகுதியை ஒரு பன்னாட்டு நிறுவனம் வாங்க அனுமதிப்பது நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிப்பதாக அமைந்துவிடும் என்று எச்சரித்தது. ஏற்கெனவே சீனாவின் அச்சுறுத்தல் எல்லையில் நீடிக்கும்போது இப்படி எண்ணெய் வளத்தின் பெரும் பகுதியை கைப்பற்ற அனுமதிப்பது பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்று மத்திய அரசுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அந்தச் செய்தி குறிப்பிட்டது.
இந்தியக் கடல் பகுதிகளில் 70% எண்ணெய் வளம் கெய்ர்ன் இந்தியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் உள்ளது. அதே போல மன்னார் வளைகுடா கடலில் சுமார் 1450 சதுர கி.மீ.பரப்பளவிலான எண்ணெய் பேசினை தன் வசம் கொள்ள இலங்கையுடன் கெய்ர்ன் இந்தியா ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
இது வரை வீரப்ப மொய்லி வகித்துவந்த பதவிகளைப் பார்க்கும்போது சில விஷயங்கள் தெரியவருகின்றன. ஆகஸ்ட் 2012ல் மின்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது பல மின் பகிர்மான தனியார் நிறுவனங்களின் துயர் துடைக்கும் வகையில் நிதிச் சீரமைப்பு கொள்கை ஒன்றுக்கு காபினெட் ஒப்புதல் பெற்றார். அதன் பிறகு பெட்ரோலிய அமைச்சகம் ஜெய்பால் ரெட்டியிடமிருந்து பறித்து மொய்லி வசம் கொடுக்கப்பட்டது. ஜெய்பால் ரெட்டி ரிலையன்ஸுக்கு எதிராக செயல்பட்டார் என்பதுதான் அவர்மீதான விமரிசனமாக முன்வைக்கப்பட்டது.  அதனாலேயே அவர் பதவி பறிக்கப்பட்டது. அதே போல், அம்பானிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதற்காக எண்ணெய் அமைச்சகம் மொய்லியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முன்வைக்கப்பட்ட விமரிசனங்கள் இவை.
மொய்லி பெட்ரோலிய அமைச்சரான சில நாள்களிலேயே வழக்கத்துக்கு வந்த ஒரு முறை எண்ணெய் நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்தது. இதன்படி, விலை மாற்றங்களை சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக்கொள்ளலாம். தொடர்ந்து, எரிவாயு சிலிண்டர் விஷயத்திலும் சில மாற்றங்களை அவர் கொண்டுவந்தார்.  இருப்பினும் ஓட்டு வங்கி பயத்தின் காரணமாக இந்த முடிவுகளில் சில பின்வாங்கப்பட்டன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றதிலிருந்து ஒரு விஷயத்தில் மட்டும் எந்தவித மாறுதலும் இன்றி தீவிரமாக இருக்கிறது. நாட்டின் வளங்களைப் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்கவேண்டும்! அதற்காக கிராமங்களும் மலைவாழ்ப் பகுதிகளும் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை. பழங்குடிகளும் விவசாயிகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை.
அரசுத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதை நெறிப்படுத்துவதற்காகச் சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இதில் நிலம் கையகப்படுத்தப்படும்போது கிராமச் சபைகளைக் கூட்டி பொதுமக்கள் கருத்தறிந்தபின்தான் செயல்படுத்தப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் வளர்ச்சிக்கான விரைவு நடவடிக்கை என்ற பெயரில் சட்டநெறிமுறைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன.
வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் ஆகியவை வேண்டும்தான். ஆனால் அதற்கு நாம் கொடுக்கும் விலை என்ன என்பதைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளுக்காக மட்டுமே செயல்படும் ஓர் அரசால் சாமானியர்கள் பலன் பெறமுடியாது.
அதிவிரைவாக அனுமதி அளிக்கப்பட்ட சில திட்டங்கள்
  • 52000 கோடி  போஸ்கோ இரும்பு ஆலை, ஒடிசா
  • 23000 கோடி  என்பிசி 2800 மெ.வா. மின் உற்பத்தி நிலையம்,  ஹரியானா
  • 6000 கோடி  அருணாச்சலப் பிரதேசம்  நீர்மின் திட்டம்
  • 5000 கோடி  கேரளா, விழிஞ்சம் துறைமுகம்  நீர்மூழ்கி (சரக்கு மாற்ற) கலன்கள் திட்டம்
  • 5000 கோடி  எண்ணூர் எரிவாயு கிடங்கு திட்டம்
  • 467 கோடி  ராஜஸ்தான் நிலக்கரி சுரங்கத் திட்டம்

No comments: