Friday, January 3, 2014

காப்பீட்டில் அந்நிய முதலீடு சுருட்டலும் சேவையும்

பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் சில்லறை வர்த்தகம், வங்கிப் பணிகள், தொலைத்தொடர்பு, இன்சூரன்ஸ் என்று பல துறைகளில் அந்நிய நேரடி முதலீடு வரவேண்டும் என்றும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருக்கும் துறைகளில் அந்நிய முதலீட்டின் சதவிகிதத்தை அதிகரிக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் இன்சூரன்ஸ் துறையில் மிகப் பெரிய நிறுவனமாக இயங்கி வரும் ஐசிஐசிஐ லொம்பார்ட் என்ற நிறுவனம், போலியாகத் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் மற்றும் உரிமை கோரல்கள் வாயிலாக அரசிடம் இருந்து பல ஆயிரம் கோடிகளைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.  இதே நிறுவனத்தின்மீது இதே வகையான புகார் 2010லும் வெளிவந்தது என்றபோதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
முன்னதாக 20092010 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தகுதியற்ற நபர்களின் பெயரில் பாலிசி ஆவணங்கள் தயாரித்து ராஜிவ் காந்தி ஷில்பி ஸ்வாஸ்தய பீமா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் அரசின் பணத்தை கோடிக்கணக்கில் இந்நிறுவனம் பெற்றுள்ளதாகக்குறிப்பிடுகிறது டிஎன்ஏ இந்தியா டாட் காம்.
அதே காலகட்டத்தில்தான் இந்திய அரசாங்கம் ஐசிஐசிஐ லொம்பார்டை தனது காப்பீட்டுத் திட்டங்களில் இணைத்துக்கொண்டது.  கைவினைக் கலைஞர்களுக்கான ராஜிவ் காந்தி மருத்துவக் காப்பீட்டு திட்டம், விவசாயிகளுக்கு பருவகால அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றுக்கு மத்திய அரசு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்தத் திட்டங்களை நிர்வகிக்கும் பணி ஐசிஐசிஐ லொம்பார்ட் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது.
நாடு முழுவதிலும் 8 லட்சம் கைவினைக் கலைஞர்களை இந்தத் திட்டத்தில் சேர்ப்பதாக ஒப்புக்கொண்டது ஐசிஐசிஐ. ஆனால் குறிப்பிட்ட கால அளவில் சேர்க்க முடியாமல் போனதால் போலி ஆவணங்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த 8 லட்சம் நபர்களில் சுமார் 30,000 பேர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கைவினைத் தொழிலாளர்கள் என்றும் அவர்கள் பெயரில் உள்ள ஆவணங்களில் ஏறக்குறைய 11,000 போலியானவை என்பதும் இப்போது தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் காதி கிராமோத்பவன் குழுமத்தை அணுகி அதன் தொழிலாளர்களைச் சேர்ப்பதாக ஐசிஐசிஐ லொம்பார்ட் தெரிவித்திருக்கிறது. காதி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் கீழ் வருவதால் திட்டத்தில் சேர தகுதியற்றது என்று சொல்லப்பட்டது.  தொழில் துறை அமைச்சகத்தை காதி தொடர்பு கொண்டபோது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட (சொசைட்டி) குழுமங்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்று பதிலளிக்கப்பட்டது.
ஆனால் ஐசிஐசிஐ லொம்பார்ட் விடுவதாகயில்லை. எப்படியும் 50,000 பணியாளர்களை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, காதி அதிகாரிகளைத் தக்க முறையில் ‘கவனித்துக்கொண்டது’. இருந்தும் 11,000 பேரை மட்டுமே சேர்க்கமுடிந்தது. டிஎன்ஏ இந்தியா டாட் காம் நிறுவனம் வைத்திருக்கும் ஆதாரத்தின்படி பல பாலிசி ஆவணங்கள் பின்னர் ஐசிஐசிஐ நிறுவனத்தால் அழிக்கப்பட்டுவிட்டன.
ஏப்ரல் 2012ல் ஸ்ரீவத்சவா என்பவரால் மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்று ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. தற்போது அது நிலுவையிலுள்ளது.  இவ்வளவு நடந்த பிறகும் இந்நிறுவனத்தின்மீது எந்த வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இப்போது அரசை ஏமாற்றியதற்காக மற்றொரு பொது நல வழக்கு முளைத்துள்ளது. அதனை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், காப்பீட்டு ஓழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை (ஐஆர்டிஏ) கடுமையாகக் கடிந்து கொண்டுள்ளது. இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் தபன் சென் கடிதம் எழுதிய பிறகும் ஏன் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
‘இது ஓர் உதாரணம் மட்டுமே. பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்த 23 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பெரும்பாலானவை பாலிசிதாரர்களின் கிளைம்ஸ் பலவற்றை நிராகரித்துள்ளன. மேலும், பாதியில் கைவிடும் பாலிசிகளின் மீது பெரிய அளவில் தொகை இழப்பு ஏற்படுத்தி மிச்சத்தை மட்டும் வழங்குகிறார்கள். அல்லது, பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களைக் காண்பித்து, சேமிப்பு மதிப்பை மிகக் குறைத்துக் காட்டுகிறார்கள்.’ என்கிறார் தென் மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுவாமிநாதன்.
இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவு, ராபர்ட் வதேரா நில பரிவர்த்தனை முறைகேடு, நிலக்கரி ஊழல் கோப்புகள் மாயம், லடாக்கில் சீனா ஊடுறுவல், பாகிஸ்தான் ராணுவ அத்துமீறல்கள் போன்ற பலவற்றையும் மீறி இந்திய நாடாளுமன்றத்தின் நடப்பு மழைக்காலக்கூட்டத் தொடர் நடைபெற்து. புதிய பென்ஷன் திட்ட மசோதா, பாராளுமன்ற (தகுதியிழப்பு) திருத்த மசோதா, உணவு பாதுகாப்பு மசோதா போன்றவை எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்ற நிலைக்குழுவின் எதிர்ப்பு காரணமாக இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா 2008 விவாதிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுவிட்டது. அரசுத் துறை இன்சூரன்ஸ் ஊழியர்களும் தனியார்மய எதிர்ப்பாளர்களும் தாற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
முதன் முதலில் 1955ம் ஆண்டு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்மீது நாடாளுமன்ற உறுப்பினர் அமோல் பராதே எழுப்பிய புகாரைத் தொடர்ந்து அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்தின் முதலாளியும், இந்தியாவின் மிகப்பெரிய வணிகருமான சச்சின் தேவ்கேகர் என்பவர்  இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அதனைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் சட்டம் 1956ன் வாயிலாக ஏறக்குறைய 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை  (154 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், 16 அந்நிய நிறுவனங்கள் மற்றும் 75 வைப்புநிதி நிறுவனங்கள்) இணைத்து இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) மற்றும் மத்திய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.
அப்போது எல்ஐசியின் மூலதனப் பங்கு என்பது 100 சதவிகிதம் அரசின் வசமே இருந்தது. தனது முதல் ஆண்டான 1957ல் எல்ஐசி 7,94,585 பாலிசிகளை விற்றது. இது தேசியமயத்துக்கு முன்பு இருந்த 245 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் சேர்ந்து விற்ற பாலிசிகளைவிட 30% அதிகம்.
பின்னர் 1999ல் ஐஆர்டிஏ உருவாக்கத்துக்கான மசோதா நிறைவேற்றப்படும்போதே இந்தத் துறையில் 26% அந்நிய முதலீட்டுக்கான கதவும் திறந்து விடப்பட்டது. தற்போது இன்சூரன்ஸ் சட்டத் திருத்த மசோதா 2008 வாயிலாக அதை 49% ஆக உயர்த்துவதற்கான முயற்சியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஈடுபட்டு வருகிறது.
இதில் முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டும். யஷ்வந்த் சின்ஹா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்தவர்கள் என்பதோடு, அதிகமான காங்கிரஸ் உறுப்பினர்களும்  அங்கம் வகிக்கின்றனர். இந்தக் குழு காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு தேவையற்றது என்று அழுத்தமாகத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளது. அதன் காரணமாகக் காப்பீட்டுத் துறையில் நாடாளுமன்ற ஒப்புதலின்றி அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்த முடியாது என்ற நெருக்கடியில் உள்ளது அரசு.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்ட மசோதாவில், ஓய்வூதியத்தில் அந்நிய முதலீடு என்பது காப்பீட்டுத் துறையில் உயர்த்தப்படுவதைப் போலவே உயர்த்தியமைக்கப்படும் என்று ஒரு ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே அரசின் பிடிவாதப் போக்கைத் தெரிந்துகொண்டுவிடலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி  அரசுக் காப்பீட்டுத் துறையைப் பாதித்துள்ளதா? மதுரை கோட்ட ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் என்.சுரேஷ் குமார் மறுக்கிறார். ‘கடந்த 10 ஆண்டுகளில் இந்தியக் காப்பீட்டுத் துறை பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.  ஆயுள் காப்பீட்டில் 200102ல் 19,857 கோடியாக இருந்த புது வணிக பிரீமியம், 200809ல் 87,006 கோடியாக வளர்ந்துள்ளது. 31 மார்ச் 2013 நிலவரப்படி, சொத்து மதிப்பீடு 15,60,481 கோடி (240 பில்லியன் அமெரிக்க டாலர்). மொத்த ஆயுள் நிதி 14,33,103 கோடி.’
அவர் தொடர்கிறார். ‘பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்கள் நுழைந்த பிறகு காலாவதியாகும் பாலிசிகள் குறித்து கவலை எழுந்துள்ளது. தவறான விற்பனைகூட அதிக அளவில் பாலிசிகள் காலாவதியாவதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. ஐஆர்டிஏ கூற்றுப்படி  எல்ஐசி மட்டுமே மிகக் குறைந்த காலாவதி விகிதம், அதாவது 4% வைத்துள்ளது.  ஆனால் தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை, மாக்ஸ் நியூ யார்க்கில் இது 19% ஆகவும் ஐசிஐசிஐ புருடென்ஷியலில் 53% ஆகவும் உள்ளது. இதிலிருந்து, உலகப் பொருளாதார நெருக்கடியால் இந்தியக் காப்பீட்டு துறையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரிகிறது. மாறாக, வளர்ச்சியே ஏற்பட்டு வருகிறது.’
தனியார் காப்பீட்டு நிறுவனங்களின்மீது மக்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது? தொழில் நகரமான கோவை மற்றும் திருப்பூரில் வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றும் ஆர். முரளியிடம் உரையாடினோம்.
‘பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீட்டுத் திட்டங்கள் அனைத்தும் சந்தையோடு இணைந்து இருப்பதால் சேமிப்பின் மதிப்பு உயராமல் இருப்பதை வாடிக்கையாளர்கள் பார்க்கிறார்கள். இன்னொரு விஷயம், இங்கு முதலாளிகள் தங்கள் நிறுவனத்துக்கான காப்பீடு மற்றும் தனி நபர் காப்பீடுகளுக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைத்தான் நாடுகின்றனர். கிளெய்ம்ஸ் தீர்வைப் பொருத்தவரை எல்ஐசியின் விகிதம் 99.74%. ஆனால் தனியார் துறையின் சராசரி 70%. ஆக மொத்தம் அரசுத் துறை காப்பீட்டின்மீதுதான் மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.’
அந்நிய முதலீட்டை அதிகரித்தால் ஆரோக்கியமான போட்டி சூழல் உருவாகும், அது வாடிக்கையாளர்களுக்கு அதிகப் பலனையே பெற்றுத்தரும் என்றுதான் இதுவரை சொல்லி வருகிறார்கள். ஆனால், காப்பீட்டுத் துறையைப் பார்க்கும்போது உண்மை  அதற்கு நேர் எதிரானது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் எந்த வகையிலும் மக்களுக்கு நன்மை ஏற்படவில்லை என்பது மட்டுமின்றி ஊழல் பெருகிப்போயுள்ளது. கூடுதலாக அரசின் கஜானாவும் இத்தகையவர்களால் காலியாகிக்கொண்டிருக்கிறது.

நன்றி- ஆழம் மாத இதழ் (எனது பதிவு)

No comments: