Friday, January 3, 2014

வெட்கப்பட வேண்டும்!


திண்ணியம், மேலவளவு, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், நாய்க்கன் கொட்டாய்…. இந்த ஊர்களையெல்லாம் தமிழக வரைபடத்தில் அவ்வளவு    சுலபத்தில் கண்டுபிடித்துவிடமுடியாது. ஆனால் சாதிய பாகுபாடு, அவமரியாதை, மோதல், படுகொலை என்று கணக்கெடுத்தால் கடந்த பத்தாண்டுகளில் செய்தி ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட கிராமங்களாக இவையே இருக்கின்றன.
இந்த வரிசையில் தற்போது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவிலுள்ள வடுகப்பட்டியும் சேர்ந்துள்ளது. இங்கு முக்குலத்தோர் உள்ளிட்ட ஆதிக்க (இந்து) சாதியினர் பெரும்பான்மையினராகவும், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தலித் மக்களும் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பேருந்து நிழற்கூடையின் கீழுள்ள இருக்கைகளில் ஆதிக்க சாதி இந்துக்கள் முன்பாக தலித்துகள் அமரக்கூடாது. அதே போல் வடுகப்பட்டியின் மையத்தில் அமைந்திருக்கும் திண்ணைகளை தலித்துக்கள் பயன்படுத்தக்கூடாது. இது நடைமுறையில் உள்ள வழக்கம். கடந்த மாதத் தொடக்கத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டபோது, முதல் நாள் பள்ளிக்கு ஆசையுடன் புறப்பட்ட அருண்குமார் என்ற பட்டியல் சாதி மாணவன் குறிப்பிட்ட தெருவைக் கடந்து செல்லும்போது தடுத்து நிறுத்தப்பட்டான். அதே ஊரைச் சேர்ந்த நிலமாலை என்பவர் அந்த மாணவனைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். அவனது செருப்பைக் கழற்றி தலையில் வைத்துக்கொண்டு செல்லுமாறு அருண்குமார் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். வேறு வழியின்றி அந்த மாணவன் அவ்வாறே செய்திருக்கிறான்.
இந்தச் சம்பவம் தலித் மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் விடுதலை முன்னணி போன்ற அமைப்புகள் கண்டன போஸ்டர்கள் ஒட்டினர். தருமபுரி, மரக்காணம் பகுதிகளில் சாதிக் கலவரங்கள் நடைபெற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பதால் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் இயக்குனர் வெங்கடேசன் தலைமையில் டிஎஸ்பி சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் வடுகப்பட்டி சென்று விசாரணை நடத்தி முடித்துள்ளனர். தமிழகத்தில் அண்மைக்காலமாக நிகழ்ந்து வரும் சாதி மோதல்கள் குறித்து கேட்டதற்கு, ‘இப்பிரச்னை குறித்தும் அதற்கான தீர்வுகள் பற்றியும் ஆலோசிப்பதற்கு மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை விரைவில் நடத்தவுள்ளோம்’ என்று பதில் அளித்துள்ளனர். முன்னதாக மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து முதல் நாளிலேயே தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளியேற்றப்பட்டது குறித்தும் தேசிய ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து வடுகப்பட்டி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மதுரை, தேனி, ராமனாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் மற்றும் தலித் மக்களிடையே ஆங்காங்கு தொடர்ந்து சாதிய மோதல்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. தலித் மக்கள்மீதான அவமதிப்புகள், பாகுபாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளும் என்ஜிஓ அமைப்புகள் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின்கீழ் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் யாரும் தண்டனை பெறுவதில்லை என்கிறார்கள். மாறாக சில தினங்களில் நீதிமன்றத்துக்கும் காவல்துறைக்கும் வெளியே பேசி பிரச்னையை முடித்துக்கொண்டு விடுகிறார்களாம்.
கடந்த ஜூன் 11ம் தேதி, சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை கிராமத்தில் புதிரை வண்ணார் என்ற தலித் பிரிவைச் சேர்ந்த வேட்டை வில்லன் என்பவரின் குடும்பத்தினர் தாக்கப்படுவதாகவும் விரட்டப்படுவதாகவும் புகார்கள் கிளம்பின. 2004ல் வேட்டை வில்லனின் நிலமும் வீடும் ஆதிக்கச் சாதியினரால் கையப்படுத்தப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் மதுரைக்கு அருகிலுள்ள உத்தங்குடியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, வேட்டை வில்லனின் மகன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.  சமீபத்தில் சாத்தரசன்கோட்டையில் வறட்சி நிவாரணம் வழங்கப்படுவது அறிந்து, அதை வாங்கச்சென்றபோது வீடும், நிலமும் இல்லாத உனக்கு எப்படி நிவாரணம் வரும் என்று அங்குள்ளவர்கள் தாக்கி, தரக்குறைவாக பேசி விரட்டியிருக்கின்றனர். உடனே வேட்டை வில்லனும் அவரது குடும்பத்தினரும் வித்தியாசமான முறையில் ஒருவர் தலையில் விறகு, ஒருவர் தலையில் அடுப்பு, ஒருவர் தலையில் குடம் என்று சுமந்து மதுரை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி வந்துள்ளனர். ஆனால் வழியிலேயே காவல்துறையினர் இவர்களை மடக்கி, புகாரைப் பெற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
ஒரு பக்கம், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. மற்றொரு பக்கம், இழப்பீடு பெறுவதற்காக சில சமயம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சில தலித் மக்களே தவறாகப் பயன்படுத்துவதாகவும் புகார்கள் உள்ளன.
சட்டத்தால் மட்டுமே தீர்க்கமுடிந்த பிரச்னை அல்ல இது. கிராமங்கள் தோறும் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த முதியவர்கள், இளைஞர்கள் அடங்கிய சமாதான குழுக்கள் ஏற்படுத்தப்படவேண்டும். மேற்படி சம்பவங்கள் நடக்கும்போது, சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு பேசி இந்தக் குழு சமரசம் செய்யவேண்டும். நாகரிகமும் கல்வியறிவும் வளர்ந்துள்ள இன்றைய சூழலிலும் சாதி மோதல்களையும் அவமதிப்புகளையும் அனுமதிப்பது வெட்கக்கேடான விஷயம்.
நன்றி - ஆழம் மாத இதழ் (எனது பதிவு)

No comments: