Wednesday, March 13, 2013

என்று மடியும் இந்த கொத்தடிமை முறை ?


என்று மடியும் இந்த கொத்தடிமை முறை ?
 அனுமேகா யாதவ் / தமிழில் எஸ்.சம்பத்

(கடனால் நெறிபடும் கோட்டா மாவட்ட கொத்தடிமைகள் என்ற தலைப்பில் தி இந்து நாளிதழில் 19 பிப்ரவரி 2013 அன்று வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)
கடன் எனும் சுத்தியலால் இடி - ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்ட கல்குவாரியில் குடும்பத்தோடு கொத்தடிமையாக பணிபுரியும் பாபுலால் கைர்வா
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் கிரானைட் கல் குவாரியில் சாம்பல்-பழுப்பு நிற பலகை கற்களின்  மீது சூரிய ஒளி அஸ்தமிக்கும் நேரம்.  பாபுலால் கைர்வா, குவாரியின் விளிம்பில் அமர்ந்து கொண்டு கல்லின் மேல் டான்கி என்ற பெரிய அளவிலான நகம் போன்ற உளியை வைத்து சுத்தியலால் முனைப்பாக தட்டிக் கொண்டிருக்கிறார்.  பாபுலால் அந்த கல் நேர் கோடாக உடையும் வரை தட்டிக் கொண்டிருப்பார்.  ஒவ்வொரு 2 க்கு 10 சதுர அடி அளவில் பலகை போன்று காலடிக்கு பதிக்கும் கல் சந்தையில் ரூ 1600 வரை ஈட்டித் தருகிறது.  ஆனால் 38 வயதாகும் அந்த தொழிலாளிக்கு எந்த கூலியையும் பெற்றுத் தருவதில்லை.
"நான் இந்த குவாரியின் முதலாளி பகதூர் பாபுவிடம் 5 வருடம் முன்பாக ரூ 10000 கடன் பெற்றேன்.  அவர் தற்போது எனது கடன் இரட்டிப்பாகியுள்ளது என்கிறார்.  அவர் எனக்கு ஒவ்வொரு மாதமும் ரூ 500 கூலியாக குடும்ப செலவிற்காக கொடுக்கிறார், வருட இறுதியில் முந்தைய கடனுக்காக அதை சரிக்கட்டிக் கொள்கிறார்" என்கிறார் அந்த தொழிலாளி.  அந்த கல் நேர் கோட்டில் உடையவில்லையென்றால், அவர் முதலிலிருந்து மீண்டும் உடைக்கத் துவங்க வேண்டும்.  அவரின் மனைவி ஹீராபாய் மற்றும் மூன்று மகள்கள் கற்களை சுமப்பதில் அவருக்கு உதவியாக இருக்கின்றனர். "கடன் வருடந்தோறும் அதிகரிக்கிறது, நான் ஒரு  ரூபாயை கூட கையில் பெறுவது கிடையாது.  நான் என் கிராமத்திற்கு ஓடிவிட்டால், குவாரி உரிமையாளர் ஜீப்பிலோ, மோட்டார் சைக்கிளிலோ வந்து என்னை மீண்டும் அழைத்து வந்துவிடுவார்" என்கிறார் அவர்.
அரிய வகை கடப்பா (சேண்ட் ஸ்டோன்) கல் உடைக்கும் குவாரிகள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்ட எல்லையிலிருந்து ராஜ்புரா - தாபி என்பவற்றிற் கிடையில் 100 கி,மீ நீளத்திற்கு தொடர்ச்சியாக அமைந்துள்ளது.  பெரும்பாலான கற்கள் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலத்தில் கட்டிட பணிகளுக்கு பயன்படுகிறது.  கடந்த சில வருடங்களாக அவை சவுதி அரேபியாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  கோட்டாவில் கற்கள் வாங்க வந்திருக்கும் பாடக்சிங் "குவாரியின் அளவிற்கேற்ப அவர்களின் ஆண்டிறுதி லாபம் என்பது ரூபாய் ஐந்து கோடி வரை இருக்கும் என்கிறார்".  இங்கே கிடைக்கும் இந்த அரிய வகை கற்கள் கையால் செதுக்கித்தான் உடைக்க வேண்டும், இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது என்கிறார் வடக்கு ராஜஸ்தானை சேர்ந்த கற்கள் வாங்கி, விற்கும் வியாபாரி ஓம் பிரகாஷ் அகர்வால்.
பாபுலால் கைர்வா குடும்பத்துடன் சேர்ந்து 5 தொழிலாளிகள் அந்த குவாரியில் உள்ளனர்.  மிகப் பெரிய குவாரி என்பது நேவாஜி குஜ்ஜார் என்பவருக்கு சொந்தமாக உள்ளது.  அதில் 400க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர்.  பெரும்பாலான தொழிலாளர்கள் மேற்சொன்னவாறு கடன் பெற்று அதை அடைக்கும் வகையில் கொத்தடிமைகளாகத்தான் உள்ளனர்.  நான் இங்கு என் குடும்பத்துடன் 9 வருடம் முன்பாக வந்தபோது ரூ 20000 முன்பணமாக பெற்றேன்.  அந்த வருட முடிவில் குவாரி உரிமையாளர் எனது கடன்  ரூ 24000 என கூறியதாக சொல்கிறார் ஜேட்கா சாஹேப்.  அவர் ஒவ்வொரு 2 - 3 வாரத்திற்கொரு முறை கூலி  ரூ 400 லிருநது 500 வழங்குவதாக சொல்கிறார்மத்தியப் பிரதேசம், ஜாபுனா மாவட்டத்திலிருந்து வரும் தொழிலாளி மங்கள்ராமா. 

பாலைவனமாய் போன கிராமம்

பாபுலால் கைர்வாவின் கிராமத்திலிருந்து 150 கி.மீ. தொலைவிலுள்ள பாரன் மண்டலத்தில் கிஷ‌ன்கைஞ்ச் பகுதியில் கிராமமே பாலைவனம் போல் வெறுமையாக இருக்கிறது.  அங்கிருந்து 500ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு, நிலங்களை இழந்து தீபாவளி முடிந்து கோட்டாவிலுள்ள குவாரிகளுக்கு சென்று விட்டனர்.  அவர்கள் மே மாதம் தான் திரும்ப முடியும்.  அந்த கிராமத்திலுள்ள முதியவர்கள் அங்கிருந்த கைர் என்ற மரத்தின் காரணமாக அவர்கள் குடும்ப பெயர் கைர்வா என அமைந்ததாக கூறுகின்றனர்.  நாங்கள் அந்த மரங்களை வெட்டி உருப்படிகளாக செய்து விற்போம் என விவரிக்கிறார் கணேஷ் ராம் கைர்வா.
மாநில அரசு இந்த வகை பணிகளுக்காக கைர்வாக்களுக்கு கூட்டுறவு சங்கங்களை அமைத்தது.  ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக காடுகள் அழிந்து வந்ததால், கூட்டுறவு சங்கங்களும் மூடப்பட்டன.  "தற்பேழ எல்லோரும் குவாரிகளுக்கு செல்கிறோம், எனது மகன் கடந்த 20 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து கடந்த சங்கராந்தியின் (ஜனவரி) போது ரூ 25000 கடன் என்ற நிலையில் இறந்து விட்டான்.  நான் அவனுக்கு பதிலாக பணியை தொடர இயலாத வண்ணம் வயோதிகனாக உள்ளேன் என அதன் உரிமையாளரிடம் கூறினேன்.  எனது இரண்டு மகன்களும் இந்த குவாரியில் பணிபுரிந்துள்ளனர்.  தேவராஜ், எனது இளைய மகன் அங்கு சென்றபோது அவனுக்கு வயது 18குவாரி முதலாளி எனது அந்த மகனை ஜீப்பில் திரும்ப அழைத்து வந்தார்.  தேவராஜ் அவரது முதுகில் இருந்தவன் இரத்தமாக வாந்தி எடுத்தான்.  உடனடியாக அவனை பாரூனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்" என்கிறார் ஜசோதாபாய்.
கிராமத்திலுள்ளவர்கள் பாரூன் மற்றும் கோட்டா மாவட்டத்தில் கட்டிடப் பணியில் நன்கு சம்பாதிக்கலாம், ஆனால் ஒரு முறை குவாரிக்கு சென்றவர், கடனை அடைப்பதற்காக தொடர்ந்து அங்குதான் செல்ல வேண்டியுள்ளது என்கின்றனர்.  எனது மகன் மான் சிங் குவாரியில் பல வருடம் வேலை பார்த்தான்.  கல் உடைக்கும் போது இரண்டு விரல்களை இழந்தான்.  அப்போது அவன் கணக்கில் ரூ 40000 கடன் இருந்தது.  அவன் கிராமத்திற்கு திரும்பியவுடன், துரத்திக் கொண்டே முதலாளி வந்தார்.  இரண்டு விரல்களை இழந்த நிலையில் அவனால் எப்படி பணிபுரிய முடியும் என நான் கெஞ்சியவுடன், போகட்டும் என விட்டுவிட்டனர் என்கிறார் கோர்லால்.
அரசின் அக்கறையற்ற நிலை
தெற்கு ஆசியாவிலேயே இந்தியாதான் முதன் முறையாக கொத்தடிமை முறையை, கொத்தடிமை தொழிலாளர் (ஒழிப்பு) சட்டம் 1976ன் மூலம் நீக்க முடிவு செய்தது.  சந்தர்ப்பவசமாக அவசர நிலை பிரகடன காலமான 1975 - 1977 ல் சில அதிகாரிகள் அதற்கான விதிகளை இந்திராகாந்தியின் 20 அம்ச திட்டங்களுள் ஒன்றாக முன்னிறுத்தி விவசாய தொழிலாளர்களின் கொத்தடிமை முறையை முடிவிற்கு கொண்டு வந்தனர்.
எப்போதுமில்லாத வகையில் காந்தி சமாதான நிறுவனம் 1978ல் மேற்கொண்ட ஆய்வில் 10 மாநிலங்களில் 26 லட்சம் கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளனர் எனவும் அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் ஆதிவாசிகள் எனவும், 60 சதவீதம் பேர் தலித்துக்கள் எனவும் ஆய்வு புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.  அதே வருடம் தேசிய மாதிரி ஆய்வு மையம் மேற்கொண்ட 32 வது சுற்று ஆய்வில் அலுவலக ரீதியாக 16 மாநிலங்களில் 3.43 லட்சம் கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளனர் என குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு இது குறித்து தேசிய அளவிலான ஆய்வு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.  மாநிலங்கள் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு 2012ல் அளித்த ஆய்வறிக்கையில் 18 மாநிலங்கள் கொத்தடிமை தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்தில் "இல்லை" என தெரிவித்திருப்பதான விபரத்தை தி இந்து நாளிதழ் வெளிக் கொணர்ந்துள்ளது.
ஒன்றுபட்ட நடவடிக்கைகளின் மூலம் தொழிலாளர்களுக்கு வருமான பாதுகாப்பு, உணவிற்கான  பாதுகாப்புகளை உறுதி செய்வதன் மூலம்தான் கொத்தடிமையை ஒழிக்க முடியும்.  அலகாபாத் மாநிலத்தில் குவாரிகளில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த கோல் பழங்குடியினர் ஒன்றுபட்ட நீண்ட கால போராட்ட நடவடிக்கைகளின்  மூலம் சுரங்க உரிமையை வென்றெடுத்தனர் என்கிறார் பொருளாதார நிபுணர் ரவி ஸ்ரீவத்சவா.  அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004ல் நிறுவிய முறைசாரா பிரிவுகளில் தொழில் நடத்துவோருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினரும் ஆவார்.  தற்போது பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களுக்கான குறைந்த பட்ச கூலியை கணக்கிட்டு அறியக் கூட சிரமப்படுகின்றனர்.  ஏனெனில் சட்ட ரீதியாக தேசிய அளவிலான குறைந்த பட்ச கூலி நிர்ணயம் என்பதற்கான தளம் இல்லை.  நாங்கள் அதற்கான அழுத்தமாக பரிந்துரைத்ததோடு- அவர்களின் சமூக பாதுகாப்பு- உழைப்புத்திறன், போன்றவற்றை விளக்கி அனைத்து தொழிலாளர்களுக்குமான பயிற்சி முகாம்களை நடத்துகிறோம் என்கிறார் அவர்.  ஒரு தொழிலாளிக்கு அனைத்து பிரிவுகளிலும் ஒரு நாளைக்கு ரூ 115 குறைந்த பட்ச கூலி என்ற தொழிலாளர் துறை அமைச்சகம் முன் மொழிந்தது 2009 லிருந்து தற்போது வரை நிலுவையிலுள்ளது. 
பின்ஜனா கிராமத்திலுள்ளவர் எங்களின் கடன் சுற்று என்பது அந்தந்த தொழிலாளியின் உயிர் பிரிதலோடுதான் முடியும் என்கின்றனர் வேதனையுடன்.  ஒருவர் இறந்து, அவர் குடும்பத்தில் அவரின் கடனிற்காக மாற்றாக பணிபுரிய ஒருவரும் இல்லை என்ற நிலை வரும் போதுதான் அவரின் கடனும் சாகும் என்கிறார் கோர்லால்.
இந்திய உச்ச நீதிமன்றம் கொத்தடிமை குறித்து என்ன சொல்லியிருக்கிறது?
1994 - மாநிலங்கள் உடனடியாக கொத்தடிமை தொழிலாளர்கள், அவர்களிடம் பணி வாங்கும் முதலாளிகள், ஒப்பந்தகாரர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும், காலாண்டிற்கொருமுறை உச்ச நீதிமன்ற சட்ட உதவி மையத்திற்கு அது குறித்து அறிக்கை அனுப்ப வேண்டுமெனவும் உத்திரவிட்டது.
1997 - கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு அமுல்படுத்துவதை கண்காணிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நியமிக்கப்பட்டது
2001 - தேசிய மனித உரிமை ஆணையம் திரு எஸ்.ஏ.சங்கரன் தலைமையில் நியமித்த நிபுணர் குழு மாநில அரசுகளை விமரிசித்து தனது அறிக்கையை அளித்தது.
2004 - மாநிலங்கள் அரையாண்டுக்கு ஒரு முறை தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென உத்திரவிடப்பட்டது.  மேலும், புலனாய்வு குழுக்கள் அமைக்கவும், தொழிலாளர்கள் புனரமைப்பிற்காக நிலம் சார்ந்து, குறிப்பிட்ட திறன் சார்ந்து, பணி சார்ந்து அவர்களின் விருப்பத்திற்கேற்ப பணிபுரிவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும் உத்திரவிட்டது
2010 - 2001 லிருந்து 2010 வரை கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு ஆய்வுகளுக்காக தொழிலாளர் அமைச்சகம் வழங்கிய 4.94 கோடி தொகை எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதற்கான விளக்கம் கேட்கப்பட்டது.
2012 - மாநிலங்களில் புதிதாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்பட்டு, ஆய்வறிக்கைகள் கணணி மயப்படுத்தப்பட்ட ஆவண புள்ளி விபரங்களாக வைக்கப்படவேண்டும் எனவும் உத்திரவிட்டது

நன்றி / தி இந்து ---

No comments: