Monday, May 27, 2013

100 கோடி ஜனநாயகம்

100 கோடி ஜனநாயகம்கர்நாடகத்தின் சட்டப்பேரவைக்கு 2013 மே முதல் வாரம் தேர்தல் நடைபெற உள்ளது.  முன்பெல்லாம் ஆட்சி அதிகாரத்துக்கு யார் வரவேண்டும் என்று சாராய வியாபாரிகளும் தரகர்களும் திரை மறைவில் இருந்து தீர்மானித்தார்கள். அதன் பிறகு கார்ப்பரேட் முதலாளிகள் யார் எந்தத் துறையின் அமைச்சராக வரவேண்டும் என்பதைத் தீர்மானித்தார்கள். இப்போது அனைத்தும் மாறிவிட்டன. பணம் படைத்த முதலாளிகள் நேரடியாகவே அரசியலுக்கு வந்துவிடுகிறார்கள். சில கோடிகளை முதலீடாக விதைத்து 5 வருட பதவி காலத்தில் ஏராளமான கோடிகளை அறுவடை செய்துவிடுகிறார்கள்.
கர்நாடகாவின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் பல வேட்பாளர்கள் அவர்களாக மனமுவந்து தாக்கல் செய்துள்ள விபவங்களின் அடிப்படையில் மட்டும் பார்த்தாலே 10 வேட்பாளர்கள் ரூபாய் நூறு கோடி தாண்டி சொத்து சேகரித்து வைத்துள்ளார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் வீடு, மனை விற்பனையாளர்கள் (ரியல் எஸ்டேட்), சுரங்கத் தொழில் புரிவோர், கல்வி நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர் நேரடியாகவே அரசியலில் களத்தில் இறங்கியுள்ளனர்.  யார் வேட்பாளராக களம் இறங்க வேண்டுமென்பதை அவருடைய சொத்து மதிப்பைக் கொண்டுதான் அனைத்து கட்சிகளும் முடிவுசெய்கின்றன.
சுரங்கம்
பெல்லாரி, தும்கூர் மாவட்டங்களில் பெருமளவில் இரும்பு தாது வெட்டி எடுக்கப்படுகிறது. இருப்பினும் 2010 &11ல் கர்நாடகா லோக்யுக்தா விசாரணை, உச்ச நீதிமன்ற கெடுபிடிகள் போன்றவற்றால் சுரங்கத் தொழில் சற்று சுணக்கம் கண்டிருந்தது.  பல்லாயிரம் கோடி வருவாய் தரும் தொழில் என்பதோடு பல்லாயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. இந்த மாநிலத்தின் சுரங்க ஜாம்பவான்கள் ஜி ஜனார்த்தன ரெட்டி (தற்போது ஹைதராபாத்தில் நீதிமன்ற காவலில் உள்ளார்), அனில் லாட், சந்தோஷ் லாட் ஆகியோர் நேரடியாக அரசியலில் ஈடுபடுகின்றனர். இதில் சந்தோஷ் லாட் என்பவரின் சொத்து மதிப்பு ரூ 186.40 கோடி
கல்வி
கல்வி நிறுவனம் என்பது பணம் கொழிக்கும் தொழிலாகிவிட்டது. கர்நாடகாவில் பல அரசியல்வாதிகள் சங்கிலித் தொடராக கல்வி நிறுவனங்கள் வைத்துள்ளனர். ஏறக்குறைய பெரிய அளவிலான ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் அனைவருடைய பெயரிலும் கல்வி நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.
ரியல் எஸ்டேட்
சுரங்கத் தொழில் தொய்வடைந்ததைத் தொடர்ந்து அதிலுள்ள கோடிகள் ரியல் எஸ்டேட்டில் பாய ஆரம்பித்தது. குறிப்பாக பெங்களூரு, மைசூர், மங்களூர், தும்கூர், ஹாசன் மற்றும் ஷிமோகா ஆகிய இடங்களில் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தார்கள். நில மதிப்புகள் பெங்களூருவில் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள நகரங்களிலும் அதிகரித்தது. விவசாயமற்ற நிலத்தின் மதிப்பு பெங்களூருவில் குறைந்தபட்சம் சதுர அடிக்கு ரூ.1500 முதல் அதிகபட்சம் அது அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து லட்சம் வரை விலை போகிறது.
பல ரியல் எஸ்டேட் முதலாளிகள் ஏற்கெனவே அரசியலில் உள்ளனர். எம்.கிருஷ்ணப்பா (லே அவுட் கிருஷ்ணப்பா) நந்தீஷ் ரெட்டி, சதீஷ் ரெட்டி, கிருஷ்ண பலேமர் ஆகியோர் தங்கள் அதிர்ஷ்டத்தை மீண்டும் ஒருமுறை சோதித்துப் பார்க்க களம் இறங்கியுள்ளனர்.
சாராயம் மற்றும் சுரங்கத் தரகு வியாபாரத்துக்கு மாற்றாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானப் பணிகள் அமைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நந்தீஷ் ரெட்டி தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு ரூ.107.05 கோடி
  • காங்கிரஸின் ப்ரியா கிருஷ்ணா ரூ.910.98 கோடி
  • பாஜக ஆனந்த் சிங் ரூ.104.50 கோடி
  • ஜனதா தளம் (மதச்சார்பற்றது) ஹெச் டி குமாரசாமி ரூ.123.02 கோடி
  • காங்கிரஸின் ஆர்வி தேஷ் பாண்டே ரூ.113.93 கோடி
தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அனைவரும் களத்தில் உள்ளனர்.  காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம் (மதச்சார்பற்றது) ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களில் பலர் ரூ. 10 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு காண்பித்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் கடுமையாகக் கண்காணித்தபோதிலும் அவர்கள் கண்களுக்கு படாதவாறு இலவசங்களும் பணம் கொடுப்பதும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. இந்த நடைமுறைகளால் ஒரு சாதாரண வாக்காளர்கூட பணம் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார். மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள், அதிலிருந்து சிறிது கொடுத்தால் அதைப் பெறுவதில் என்ன தவறு என்றும் வாக்காளர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
2008 தேர்தலுக்கு பிறகு பாஜக தனிப் பெரும்பான்மைக்கு 5 இருப்பிடங்கள் குறைவாக (224 இடங்களில் 110ல் வெற்றி பெற்றது) கைப்பற்றியபோது, 9 வேட்பாளர்கள் சுரங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்தார்கள். பாஜக தன்னுடைய பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக தாமரை திட்டம் என்று களம் இறக்கி எதிர்கட்சி உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து. அவர்களுக்கு கட்சியில் வாய்ப்பு கொடுத்து இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்தது.  இதன் பின்னணியில் முழுமையாக ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்க முதலாளிகள் இருந்தனர்.
28 கோடி மக்களுக்கு மேல் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ரூ. 3075 கோடி. இந்தியாவில் 80% மக்கள் ஒரு நாளைக்கு ரூ.100 க்கும் குறைவான வருமானம் பெறுகிறார்கள். ஆனால் எம்.பிக்களின் சராசரி சொத்து மதிப்பு 5 கோடிக்கு மேல். 2009ல் தேர்வு செய்யப்பட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 300க்கு மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள்.
பணத்தின் அதிகாரம் கர்நாடகாவில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.  இருப்பினும் 2004 தேர்தலில் அது முடிவெடுக்கும் சக்தியாக அமைந்தது.  2004 தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாமல் காங்கிரஸ்  65, பாஜக 79, ஜனதாதளம் (ம.சா) 58 என இடங்கள் கிடைத்தன.  அதன் காரணமாக அதிகாரம் மாறுவதும், முதல்வர் மாறுவதுமாக இருந்தது.
அதன் பிறகு ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்கத் தொழில் முதலாளிகள் நேரடியாக அரசியலில் இறங்க ஆரம்பித்தனர். தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் 16 லட்சம்தான் செலவழிக்கவேண்டும் என தெரிவித்திருப்பது கேலிக்கூத்து என்கிறார்கள் இத்தகைய கோடீஸ்வர வேட்பாளர்கள்.
வருமான வரி நெருக்கடி என்பதெல்லாம் சாதாரண சம்பளம் பெறுவோருக்குத்தான்.  இத்தகைய கோடீஸ்வரர்களை யாரும் நெருங்கமாட்டார்கள். எப்போதாவது பழி வாங்கும் நோக்கில் இவர்கள்மீது பாய்ந்தால்தான் உண்டு. அதுவும்கூட மறக்கடிக்கப்பட்டுவிடும்.

நன்றி - ஆழம் - சித்ரகுப்தன்

No comments: