Wednesday, September 28, 2011

நெஞ்சு பொறுக்குதில்லையே...

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளியில் இரு ஆசிரியைகள் யுகேஜி படிக்கும் 4 வயது மாணவியிடம் வன்புணர்ச்சி மேற்கொண்டதாக புகார். இரு ஆசிரியைகள் யார் எனில் எல்கேஜி ஆசிரியை ஒருவர் மற்றும் அந்த பள்ளியின் முதல்வர்?!


பள்ளி நிர்வாகம் மற்றும் சில 'உயர்மட்ட' அழுத்தங்களின் காரணமாக மந்தமானது காவல்துறை நடவடிக்கை. பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாரின் மனு நேரடியாக தலைமை நீதியரசர் உள்ளிட்ட முதன்மை நீதிபதிகளின் கவனத்திற்கு வர அதிர்ச்சியில் உறைந்து போன நீதிமன்றம் மறுநாளே மாவட்ட காவல் உயர் அதிகாரி மற்றும் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆகியோரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகச் சொல்லி உத்திரவிடுகிறது. மறுநாள் ஆஜரான காவல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இரு ஆசிரியைகளுக்கும் உயர்நீதிமன்ற தனி நீதிபதி தனித்தனியே முன் பிணையம் வழங்கியுள்ளதை சுட்டிக் காண்பிக்கின்றனர்.


அதேசமயம் மனுதாரர் தரப்பில் குற்றம் நடைபெற்றது ஆகஸ்ட் 2 ம் தேதி, ஆகஸ்ட் 4ம் தேதி கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனை மருத்துவர் குழந்தையை பரிசோதனை செய்த ஆவணத்தையும் தாக்கல் செய்து, முன் ஜாமீன் என்பது செப் 8ல் தான் வழங்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காண்பித்துள்ளனர். தலைமை நீதிபதி குற்றத்தின் கடுமையைச் சுட்டிக் காண்பித்து வழக்கை மாநில காவல்துறை மீது நம்பிக்கையிழந்து சிபிசிஐடி விசாரைணக்கு மாற்ற உத்திரவிட்டதுடன், அளிக்கப்பட்ட முன் பிணையத்தை ரத்து செய்ய தனியாக மனுச்செய்துகொள்ளாமெனவும் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பாக மதுரைக்கு அருகிலுள்ள பொதும்பு எனும் கிராமத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் சிறிய பெண் குழந்தையுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார் என்ற செய்தி. சமீப காலமாக குழந்தைகளுக் கெதிரான வன்முறை, குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது என்கிறது ஆய்வு செய்திகள். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவை திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றங்களுக்கு வழிவகுக்கிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகாதது, கணவனைவிட மனைவி அல்லது மனைவியைவிட கணவர் கூடுதல் சம்பாதிப்பது, தனிமனித ஈகோ, தொலைகாட்சி, பத்திரிகை போன்ற ஊடகங்களில் 'இது மிக சாதாரணம்' என்பது போல் பரப்பப்படுகிற முறைதவறிய உறவுகள்- ஆகியவை சம்பாதிப்பவர்கள் மத்தியில் முறை தவறல்களை தோற்றுவிக்கிறது.
பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை முடிந்து போய் குழந்தைகள் தனிமையில் பாசமற்று விடப்படுவதால், குழந்தைப்பருவ குற்றங்கள், தவறான எண்ணங்கள் தோன்றுகின்றது எனலாம். ஆனால் அறியாப்பருவ குழந்தைகளை பயன்படுத்தி பெரியவர்களின் வன்புணர்ச்சி, பாலியல் பலாத்காரம் என்பதை ஏன், எவ்வாறு என்றும், எங்கே இந்த சமூக அமைப்பு கற்றுக் கொடுத்தலில் தோற்றிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவே பதைக்கிறது நெஞ்சம். ஒரு கரிசல்காட்டு சிறுகதையில் எழுத்தாளர் திரு கி.ராஜநாராயணன், ஒரு கிராமத்தில் கழிப்பறையை பயன்படுத்த மக்களுக்கு கற்றுத் தருவதற்கு அங்குள்ள பள்ளியிலிருந்து துவங்க வேண்டுமென சொல்லியிருப்பார்.
தினக்கூலி வேலை பார்ப்பவர் தொடங்கி ஏழைகளும், எளியவர்களும் தன் நிலை தனது சந்ததிக்கு வரக்கூடாதென கற்பதற்கு பள்ளிகளுக்கு தம் குழந்தைகைள அனுப்புகின்றனர். அதுவே பாதுகாப்பானது என்றும் எண்ணுகின்றனர். அத்தகைய எழுத்தறிவிக்கும் இறைவனே எமனாகிப் போனால், நெஞ்சு பொறுக்குதில்லையை இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்-- என உரக்கக் கூவத் தோன்றுகிறது.

உரிய கல்வித்தகுதி மற்றும் ஆசிரியர் பயிற்சியுடன் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு முதலில் உறவுகளின் மென்மை, மேன்மை மற்றும் வாழ்வியலை கற்றுக் கொடுத்துவிட்டு பின்னர் அவர்களை பாடம் எடுக்கச் சொல்வதே குற்றங்கள் குறைய தீர்வாக இருக்குமோ? முதலில் அவர்கள் உறவுகைள நேசிக்க கற்றுக் கொள்ளட்டும், பின்னர் வாசிக்க கற்றுக் கொடுக்கட்டும்.

3 comments:

எம்.ஏ.சுசீலா said...

சமூகத்துக்கும் இன்றைய காலத்துக்கும் தேவையான நல்ல பதிவு சம்பத்.

Anonymous said...

குழந்தைகள் மீதான வன்முறை, சமுகத்தின் மீதான வன்முறை.

Unknown said...

நல்ல பதிவு சம்பத்,இது போன்று நல்ல விசயங்களை தொடர்ந்து பதிவிடவும்.