Sunday, August 8, 2010

ஊடகங்களுக்குத் தேவை ஒழுக்கம்

எனக்கு வயதிற்கு வந்த ஒரு பெண் குழந்தையும், இன்னும் வயதிற்கு வராத ஒரு பெண் குழந்தையும் கல்லூரி மற்றும் பள்ளியில் படித்து வருகின்றனர். அடுத்த வீட்டிலுள்ள அவர்களது தோழி அல்லது தோழியின் தாயார் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வித்தியாசமான ஓவிய பயிற்சி, சிறிய குழந்தைகள் பாடுவது, மந்திர-தந்திர நிகழ்ச்சிகள் வரும் போது அவர்கள் வீட்டுவாசலிலிருந்து எட்டிப்பார்த்து என் குழந்தைகள் பெயர் சொல்லி தொலைக்காட்சி சானல் பெயர் சொல்லி உடன் பார்க்கச் சொல்வார்கள் உடனடியாக என் வீட்டிலுள்ளவர்களும் அதை பார்ப்பார்கள். இது ஏறக்குறைய அனைத்து இடத்திலும் சகஜமே.

இரண்டு தினங்களுக்கு முன்பாக என் பெண் குழந்தைகள் வீட்டின் முன்புறம் அமர்ந்து அவரவர் வீட்டுப்பாடங்களை செய்து கொண்டிருக்கும் போது இரவு, பக்கத்து வீட்டு பெரியவர் என்னை அழைத்து சன் டி வி பார் என்றார். உடனே எனக்கு முன்பாக என் பெண்கள் எழுந்து என்னவென்ற ஆவலுடன் உள்ளே சென்று தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்து விளம்பரத்தை பார்த்துக் கொண்டிருக்கையில் தமிழக மின்வாரியத்தின் உபயத்தால் நல்ல வேளை மின்சாரம் தடை ஏற்பட்டது. அதற்குள் எனது அலுவலக நண்பரிடமிருந்து வீட்டு தொலைக்காட்சியில் நீலப்படம் ஓடுகிறது என ஒரு ஆன்மீக சொற்பொழிவாளரின் அந்தரங்கம் சந்தி சிரிப்பதை தெரிவித்தார். நான் மெழுகு திரி தேடுவது போல் உடனடியாக கேபிள் இணைப்பை துண்டித்து விட்டேன்.

இப்படி தப்பித்தார்கள் என்றோ, எத்தனை குடும்பத்தில் குழந்தைகளுடன் அமர்ந்து பார்த்து சானலை மாற்ற முடியாமல் தவித்தார்கள் என்றோ தொpயாது. பத்திரிகை மற்றும் செய்தி ஊடகங்கள் நாட்டில் நடைபெறும் அனைத்து செய்திகளையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது அவசியமே. ஆனால் அதை எவ்விதம் கொண்டு செல்வது என்பதிலும் ஒரு நாகரிகம் கடைபிடிக்க வேண்டும் என்பதே இன்றைக்கு பெரும்பாலான பெற்றோர்கள் தனித்து பேசிக் கொள்ளும் போது கவலைப்படும் பொருளாக உள்ளது.

பலரும் ஆன்மீக சொற்பொழிவாளராக உயர்ந்த இடத்தில் வைத்து போற்றி, அவரது எழுத்துக்களை ஆராதித்து வரும் வேளையில் அவரது சற்று மோசமான அந்தரங்கம் வெளிப்பட்டதென்றால் அதை மக்கள் மத்தியில் கொண்டு போவதொன்றும் தவறான செயல் அல்ல, என்பதுடன் மக்களும் திடீரென ஒருவர் மீது மாயை கொண்டு ஏமாறக்கூடாது என்பதற்காக இத்தகைய செய்திகள் அவசியம்தான் என்றாலும், அதை வெளிப்படுத்துவதிலும் ஒரு நாகரிகம் கடை பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.

இன்றைக்கு எந்த வாரப் பத்திரிகை எடுத்தாலும் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு தகாத உறவினால் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் நடிகைகளின், சில பிரமுகர்களின் அந்தரங்கம் என்ற பெயரில் பாலியல் வக்கிரங்கள் இல்லாமல் பத்திரிக்கை இல்லை என்ற அவலமான சூழல் ஏற்பட்டுள்ளது வருத்தமான ஒன்றாகும். அது மட்டுமல்லாமல் தொலைக் காட்சியின் அனைத்து விதமான சேனல்களில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல் எனப்படும் நாடகங்களிலும் தவறாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற தர்மம் கண்டிப்பாக மீறப்பட்டு உறவின் ஒழுக்கேடு கண்டிப்பாக இடம் பெற்றால்தான் அந்த தொடர் மக்கள் மத்தியில் பேசப்படும் தொடர்ந்து பார்க்கப்படும் என்கிற நெறிமுறையும் ஏற்படுத்தப்பட்டுவிட்டதோ என அஞ்ச தோன்றுகிறது.

இந்த செய்திக்கு அடுத்த நாள் நகரப் பேருந்தில் காலை அலுவலகத்திற்கு சற்று முன்னதாக செல்வதற்காக பயணிக்கும் போது முன் இருக்கையில் இரண்டு கல்லூரி மாணவர்கள் கைபேசியில் படம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். எனது இறங்கும் இடம் வந்து எழுந்திருக்கையில் பார்த்தால் கும்பகோணம் குருக்கள் படம் ஓடிக்கொண்டிருந்தது. மாணவர்களின் நிலையை நினைத்து அழுவதா, வருந்துவதா என தெரியவில்லை.

பலமுறை மேற்குறித்த நித்தியானந்தா செய்தி ஓளிபரப்பானபின் நாட்டின் முதல்வர் அது ஒளிபரப்பிய விதத்தை குறித்து தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னதாக சென்னை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற வன்முறை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாக காண்பிக்க முனைந்த நிருபர் கூட ஒரு மாணவர் மிக அதிகமான காயம் பட்டு ஒரு மரக்கிளையை பிடித்து எழ முடியாமல் திணறுவதை கூட மனிதாபிமானத்தில் அவரை காக்க முனைவதை விட படம் பிடிப்பதில் அதன் மூலம் தனது ஊடக நிறுவனத்தில் இன்சென்டிவ் பெறுவதை நோக்கமாக மாறிப்போனது கூட ஊடக செய்தி வெளியிடுதலில் மாறிப்போன மனித நேயத்தை சுட்டிக்காண்பித்தது நினைவிருக்கலாம்.

குழந்தைகளின் பாடும் திறனை போற்றும் வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் வெவ்வேறு பெயரில் எடுத்துக்கொண்டிருக்கிற நிகழ்வில் கூட கணவன், மனைவி, காதலன், காதலி ஊடலையும் நாசுக்காக சொன்ன அந்தக்கால பாடல்கள் இல்லாமல் பாடும் குழந்தையின் வயதிற்கு சற்றும் பொருத்தமில்லாத இந்தக்கால கொச்சைப்படுத்தப்பட்ட காதல் பாடலை குழந்தைகள் பாடுவதை பெற்றோர் அமர்ந்து ரசித்து மகிழந்து தாங்களும் தங்களின் குழந்தையும் தொலைக்காட்சியில் வந்ததை காலமெல்லாம் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்ற பெயரில் வக்கிரமும் ரசனையாகிப்போனதும் வருத்தமளிக்கிறது.

பேருந்து பயணத்தின் போது படிப்பதற்காக எந்த வாரப்பத்திரிகையை வாங்கினாலும் அதை நினைவாக பேருந்தின் இருக்கையிலேயே விட்டு விட்டு வந்து விட வேண்டும். ஏனெனில் குழந்தைகள் உள்ள வீட்டில் வந்து தவறியும் கூட பிரித்து பார்த்துவிட முடியாது என்ற நிலைதான் உள்ளது. முப்பது வருடங்களுக்கு முன்னால் தினசரி பேப்பருடன் வாரப்பத்திரிகையை வாசலிலிருந்து பேப்பர் பையன் தூக்கி போட்டவுடன் பெரியவர் முதல் குழந்தைகள் வரை ஆவலுடன் எடுத்து படித்து விபரங்களை தெரிந்து கொள்ள ஆவல் மேலிட்ட நிலை மாறி இன்றைக்கு வாரப்பத்திரிகை வீட்டிற்கு கொண்டு வந்தால் வயதானவர்கள் வாங்கி வந்தவனை வசவு பாடும் நிலைக்கு மாறிவிட்டது.

பத்திரிக்கை சுதந்திரம் போற்றப்பட வேண்டும், ஊடகங்களுக்கு பாரபட்சமற்ற வகையில் செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சுதந்திரம் வேண்டும் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால் உறவின் மேன்மையை, வாழ்கை நெறிகளை பண்பாடுடன் கலந்து சொல்வதில் பெயர் பெற்ற நற்றமிழ் நாட்டில் எதிர்கால சந்ததியினரை பாழ்படுத்தும், பண்பாட்டை சீர்குலைக்கும் சுதந்திரமாக இல்லாமல் ஒழுக்கத்துடன் கூடிய சுதந்திரமாக அது நெறிப்பட வேண்டும்.

(இது நித்தியானந்தா விவகாரம் சந்தி சிரித்த போது நான் எழுதி தினமணி மார்ச் 8ம் தேதி பேப்பரில் நடுப்பக்க கட்டுரையாக வெளிவந்தது. -நன்றி தினமணி)

2 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

எனக்கும் ஊடகங்களின் செயல்பாடுகள் மீது வெறுப்புள்ளது. எல்லாவற்றையுமே காசாக்கும் வழியாகப் பார்ப்பது சோகமானது.

கண்டிக்கத்தக்கது.

தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி.
செந்தில்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உண்மைதான்.. அதிக நேரம் கார்டூன் பார்க்கும் சின்ன மகனால் காப்பற்றப்பட்டோம் நாங்களும்.. :(