Sunday, August 8, 2010

மறுக்கப்படும் நீதி….




சமீபத்தில் ஆந்திரப் பிரதேச போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி பணிக்காலத்தில் இறந்துவிட்ட தொழிலாளரின் மனைவி வாரிசுப் பணி கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ள “அரசு ஊழியர் இறந்தால் கருணை அடிப்படையில் வேலை கேட்பதற்கு அவரது வாரிசிற்கு உரிமையில்லை” எனவும், இந்த விஷயத்தில் “இறந்த அரசு ஊழியர் குடும்பத்தினரின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்கலாம்” எனவும் தெரிவித்திருப்பது தொழிலாள வர்க்கத்தினரிடையே அதிர்ச்சியையும் வேதனையும் தோற்றுவித்திருக்கிறது.

படிக்கவில்லை. இந்த தனித் தீர்ப்பையும் விமரிசிக்க இதை எழுதவில்லை. தொழிலாளர்கள் சார்ந்த வழக்குகள் பல்வேறு உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் மாதந்தோறும் முடிவடைவதின் தீர்ப்புக்கள் தொகுப்பாக பிரதிமாதம் வெளியிடும் லேபர் லா ஜர்னல் என்பதை கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சந்தா செலுத்தி படித்து வருகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பாக நீதியரசர்கள் மேதகு வி.ஆர்.கிருஷ்ணய்யர், மேதகு ஓ.சின்னப்பரெட்டி, மேதகு ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் நீதிபரிபாலனம் செய்த காலங்களில் ஒவ்வொரு மாதமும் வெளியாகும் சுமார் 50 தீர்ப்புகளில் 35 தொழிலாளர்களுக்கு சாதகமாகவும், 10 நிர்வாகங்களுக்கு சாதகமாகவும், 5 தள்ளுபடி என்ற வகையிலும் தீர்ப்புக்கள் இருந்து வந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாக 60 தீர்ப்புகள் வெளியானால் அவற்றில் 40 நிர்வாகங்களுக்கு சாதகமாகவும், 10 தொழிலாளிக்கு பகுதி சாதகமாகவும், 5 தள்ளுபடி என்ற வகையிலும் 5 நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்ற வகையிலும் அமைகிறது.

தொழிலாளர் நலச் சட்டங்களெல்லாம் திருத்தப்பட்டு விட்டனவா? அல்லது முதலாளி / நிர்வாகி அனைவரும் மிகச் சரியாக செயல்படத் துவங்கிவிட்டனரா என்கிற ஐயம் எழுகிறது. இது போன்ற வழக்குகளில் மனுதாரர்களின் சமூக அந்தஸ்து என்பதை நீதியரசர்கள் / அரசு வழக்கறிஞர்கள் தாம் அமர்ந்து செல்லும் காரின் குளிரூட்டப்பட்ட கண்ணாடி வழியாக பார்க்கின்றனரோ என அச்சப்பட வேண்டியுள்ளது. இன்றைய உலகமயமாக்கம், தனியார் மயமாக்க சூழலில் பல நீதித்துறை சார்ந்தவர்களும் பங்கு வர்த்தகம், தொழில் போன்றவற்றில் பங்குதாரர்களாக / பகுதி முதலாளிகளாக இருப்பதால் முதலாளி அந்தஸ்தில் இருந்து போராடும் தொழிலாள வர்க்கத்தினரை காணுகின்றனரோ என்கிற ஐயம் எழுகிறது.

கற்ற கல்வி, அனுபவத்தின் அடிப்படையில் நடு நிலைமை வகிக்க வேண்டிய நீதித்துறையில் யார் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் அந்த கட்சி சார்ந்து வழக்கறிஞர் பிரிவு. அவரின் சமூக பார்வை என்பது அவர் கட்சித்தலைவாpன் சொல்சாரிந்தே இருக்கும் என்பதால் நடுநிலைமை சிந்தனை எங்கிருந்து வரும். இவர்களே பின்னர் நீதியரசராகின்றனர்.

குறிப்பாக அரசு போக்குவரத்துப் பணியில் 24 மணி பணி நேர சுழற்சியில் அன்றாடம் பணிக்கு சென்றால் திரும்புவது நிச்சயமில்லை என்ற அபாயத்தில் பணிபுரியும் தொழிலாளி 20 வருட பணிக்குப் பிறகு இறந்து போகிறார் என்று கொண்டால், அவரின் பணிமுடிவிற்கு கிடைக்கும் பலன் தொகைகளை மட்டும் வைத்து அவருடைய குடும்ப வாழ்க்கை அந்தஸ்தை தீர்மானிக்கிறது நீதிமன்றங்கள். ஆனால் அந்த 20 ஆண்டு பணியில் அந்த பணியாளருக்கு குடும்பத்தினால் ஏற்பட்ட சமூக பொறுப்புக்கள் அதாவது குழந்தைகள் கல்வி, தாய், தந்தை குடும்பத்தினரின் மருத்துவ செலவினங்கள் போன்றவற்றிற்கு உறவினர்கள், நண்பர்களிடம் வாங்கிய கடன்களுக்கே பணியில் இறந்தால் கிடைக்கும் ரூ 1 லட்சம், பணிக்கொடையில் ஒன்றிரண்டு லட்சம், பணிக்கால கடன்கள் போக எஞ்சியிருக்கும் சொற்ப வருங்கால வைப்பு நிதி இருப்பு ஆகியவை அனைத்தும் சில நாட்களில் கரைந்து விடும். அதன்பின் குடும்பத்தலைவரை இழந்த அந்த குடும்பத்தின் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என்பதை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் முழுமையாக எடுத்துரைப்பதில்லை.

வழக்கறிஞர்களில் சிலர் என்மீது கோபப்படக் கூடாது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் தனது ஆதங்கமாக தெரிவித்தது என்னவெனில், தற்போது புதிய வழக்கறிஞர்களில் பலர் முந்தைய தீர்ப்புக்கள், கடந்த கால வழக்குகள் ஆகியவற்றை படிப்பதில்லை. குறிப்பாக பணிநிலை (service matters) வழக்குகளில் நிறைய படிக்க வேண்டும். மாறாக மனுதாரர் ஒரு தாவாவுடன் வந்தால் அதை அப்படியே முதலாளி / நிர்வாகிக்கு ஒரு மனுவாக பதிவுத் தபாலில் அனுப்பிவிட்டு அந்த ஒப்புதல் கார்டுடன் ஒரு மாதம் கழித்து வரச்சொல்லி “மனுதாரர் மனு மீது எந்தவித பதிலுமில்லை - மனுவை பரிசீலனை செய்து இருவார காலத்தில் தீர்வளிக்க வேண்டும்” என்ற வகையில் நீதிமன்ற உத்திரவு கேட்டு மனுச்செய்து சில-பல ஆயிரங்களை கட்டணமாக பெற்றுக் கொண்டு சிரமப்படும் வாதங்களின்றி அத்தகைய மேலோட்டமான எளிய உத்திரவுகளை பெற்று விடுகின்றனர். நிர்வாகமும் குறிப்பிட்ட மனுவை பரிசீலனை செய்து இன்ன காரணங்களினால் கோரிக்கை ஏற்க இயலாது என பதிலுரை கொடுத்து நீதிமன்ற உத்திரவை மதித்து விடுகின்றனர். இத்தகைய சட்ட வழிகாட்டுதல்களினால் தீர்வின்றி தெருவில் நிற்பது தொழிலாளர் வர்க்கம் மட்டுமே.

நாடோடி மன்னன் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் வசனம் ஓரிடத்தில் “நீ மாளிகையிலிருந்து குடிசையை பார்க்கிறாய் - நான் குடிசையிலுள்ளோருடன் இணைந்து நின்று மாளிகையைப் பார்க்கிறேன் - அதுதான் நமக்குள் வித்தியாசம்” என்றொரு வசனம் வரும். வாரிசுப் பணி, தலைமை தண்டனையான பணிநீக்கம் போன்ற வழக்குகளில் நீதித்துறை இன்னும் சற்று மனிதாபிமானத்துடன் பார்த்தால் நீதி மறுக்கப்படுவது குறையும்.

இந்த கட்டுரை நான் எழுதி கடந்த 19 ஏப்ரல் 2008ல் தினமணி நாளிதழ் நடுப்பக்க கட்டுரையில் பிரசுரமாகியது -நன்றி - தினமணி (இதில் ஒன்றிரண்டு வரிகளை நீக்கியிருந்தனர்/என்னிடம் தற்போது பழைய பேப்பர் இல்லாததால் அன்று எழுதியதை அப்படியே தற்போது இடுகைக்காக வெளியிட்டுள்ளேன்)

2 comments:

Unknown said...

நண்பரே இப்போது போபால் விசயத்தில் அந்நிய நாட்டின் நிறுவனத்திற்கு சாதகமாகத்தான் இத்தனை காலம் கழித்தும் தீர்ப்பு வெளியாகி உள்ளது, நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிக்க யோசிக்கும் மனநிலையே இங்கு பெரும்பாலோரிடம் இருக்கிறது. தனக்கு சாதகமாக சட்டத்தை ஆளாளுக்கு வளைத்தால். வக்கீல்கள் மட்டும் என்ன செய்துவிட முடியும்.. போகப்போக நிலைமை மோசமாகி ஒரு விழிப்புணர்வு உருவாக்கி மீண்டும் மாறினால்தான் உண்டு. அதுவரை நம் போல் ஆட்கள் இப்படி எழுதி நம் ஆதங்கத்தை தீர்த்துக் கொள்ள வேண்டியதுதான்...

எஸ் சம்பத் said...

நன்றி செந்தில்- ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக நாம் நினைத்துக் கொண்டாலும், செய்தியின் தாக்கம் பலரை சென்றடைகிறதல்லவா அதன் மூலம் எதிர்கால மாற்றம் வராதா என்ற நப்பாசைதான்