Friday, August 6, 2010
மலிவாகிப் போன மனித உயிர்கள்
ஜுலை 19, 2010 அதிகாலை மேற்கு வங்க மாநிலம் சைந்தியா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது அதிவேகமாக வந்த உத்தர் பங்கா விரைவு ரயில் மோதியதில் 67 பேர் உயரிழந்ததுடன், நூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
ரயில்வே அமைச்சகத்தை குறைசொல்லி மம்தா பதவி விலக வேண்டுமென்ற அறிக்கையோடு எதிர் கட்சிகளின் பணி முடிந்துவிட்டது. ஆளும் காங்கிரஸ் அரசு தனது கூட்டணியில் ஒரு அங்கமான திரிணமுல் காங்கிரஸின் தலைவி ரயில்வே அமைச்சர் என்பதை மறந்து அவர் வேறு யார் கட்டுப்பாட்டிலோ இருப்பது போல் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க ரயில்வே அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அறிக்கை. இறுதியில் இறந்த ரயில் ஓட்டுனர்களின்மீதும் குற்றம் சுமத்தி ஒருவாறு அறிக்கைகள் முடிவிற்கு வந்துவிட்டது. இனி மேல் விசாரணைகள் நடைபெறும் இதன் விபரங்கள் வெளிச்சத்திற்கு வரும் முன் பலர் இந்த விபத்தை மறந்திருப்பார்கள்.
இது போன்ற விபத்துக்கள் நடைபெற்றவுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பவர் கள் அத்துடன் அதை மறந்து விடுகிறோமா என்கிற ஐயம் எழுகிறது. டிசம்பர் 2000 லிருந்து இன்று வரை நடைபெற்ற 19 ரயில் விபத்துக்களில் 810 பேர் இறந்திருக்கிறார்கள் ஆயிரக் கணக்கானோர் காயமுற்றிருக்கின்றனர். மே 2009 லிருந்து இந்த 14 மாதங்களுக்குள் 12 ரயில் விபத்துக்கள் நடைபெற்றிருக்கிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது.
குறிப்பாக நோக்கினால் ஜன 5, 2002 செகந்திராபாத் மன்மாட் விரைவு ரயில் மகாராஷ்டிராவின் காட்நண்டுர் நிலையத்தில் நின்று கொண்டிருந்த எழுது பொருள் சரக்கு ரயிலின் மீது மோதி விபத்து. டிச 15, 2004ல் அஹமதாபாத் ஜம்முதாவி ரயில் பஞ்சாப் ஜலந்தர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த உள்ளுர் ரயிலில் மோதி விபத்து. அக் 21, 2009 ல் உத்திரபிரதேசம் பஞ்சண்ணா ரயில் நிலையத்தில் கோவா விரைவு ரயிலும், மேவாரி விரைவு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்து. ஜன 16, 2010ல் உத்திரபிரதேசத்தில் கலிந்தி விரைவு ரயிலும், சிராம் சக்தி விரைவு ரயிலும் மோதி விபத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்த ஒவ்வொரு விபத்தின் முடிவிலும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என ஆட்சியாளர்கள் அறிக்கை விட்டதுடன் தமது கடமை முடிந்ததாக எண்ணியிருப்பார்கள் என்றே நினைக்க தோன்றுகிறது.
பெரிய உணவகங்களில் கை கழுவும் இடத்தில், டாய்லெட் டில் நீர் விரையம் ஆகாமல் இருப்பதற்காக மனிதர் முன் சென்று நின்றவுடன் தண்ணீர் வரத் துவங்குவதும், அந்த இடத்தை விட்டு அகன்றவுடன் தண்ணீர் வரத்து நிற்கும் விதத்திலும் ‘சென்சார்’ என சொல்லப்படும் முறை செயல் படுத்தும் அளவிற்கு அறிவியல் முன்னேறியிருக்கிறது. சாலையில் பேருந்து இரவில் சென்று கொண்டிருக்கும் போது எதிரில் முகப்பு விளக்குடன் ஒரு வாகனம் வருமானால் பேருந்தின் முகப்பு விளக்குகள் தானாக வெளிச்ச அலை குறைந்து, கூடும் (டிம், பிரைட்) கண்டுபிடிப்புகள் வந்துள்ளது. இந்த சூழலில் ரயில்களுக்கான ‘சமிஞ்கை” (சிக்னல்)களை முறைப்படுத்த அறிவியலில் மேம்பட்ட முறை புகுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
தவிர, மனித உயிர்களை மதிப்பிடுவதிலும் பாகுபாடு என்பது பரவலாக துவங்கியிருப்பதும் வேதனை அளிப்பதாக உள்ளது. சமீப மங்களுர் விமான விபத்தில் இறந்த ஒவ்வொரு வருக்கும் மாநில, மத்திய அரசு மற்றும் விமானத்துறை சேர்ந்து மொத்தம் 78 லட்சம் நஷ்டஈடாக அறிவித் திருக்கிறது. தற்போதைய ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு 3 லட்சம் நஷ்ட ஈடாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. அனுதினமும் நடைபெறுகிற சாலை விபத்தில் பலரின் கவனத்தை கவர்கிற விபத்திற்கு மட்டும் 50 ஆயிரமும், 1 லட்சமும் நஷ்ட ஈடாக அறிவிக்கப்படுகிறது. இன்றைய விலைவாசி மற்றும் வாழ்க்கை முறையில் 1 முதல் 3 லட்சங்கள் என்பது சில நாட்களில் கரைந்து விடக்கூடிய ஒன்றே.
பங்கு மார்க்கெட் சரிவிற்கும், பன்னாட்டு வியாபாரத்திற்கும், டீசல் விலை உயர்விற்கும் அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து பேசுகிற அமைச்சரவைக் கூட்டம் உடனடியாக இது போன்ற பொது மக்கள் உயிரிழப்பு விஷயத்திற்கும் ஒரு துறை சார்ந்த பிரச்சனை அவர் ஆளும் கட்சியினராக இருந்தால் அவரை பாதுகாக்கும் விதத்தில் அறிக்கைகள் விடுவது, இதர கட்சி சார்ந்தவர் என்றால் குறை சொல்லி அறிக்கை விடுவது என்ற நிலை விடுத்து, அமர்ந்து பேசி பாதுகாப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து விரைவு முடிவெடுக்க வேண்டும். ஒரு துறையில் ஊழல் என்றாலோ, விபத்து போன்ற நடவடிக்கை என்றாலோ சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவி விலகச் சொல்லிவிட்டால் போதும் அதனை தொடர்ந்த எந்த மேல் நடவடிக்கையும் வேண்டாம் என எண்ணும் அரசியல் வாதிகளின் போக்கு மாற வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என பார்க்கிற போது உயிரிழப்பிற்கான இழப்பீடு வழங்குவதிலும் பாரபட்சம் என்பது கூடாது. முன்பதிவு ரத்தாகும் போது திருப்பியளிக்காமல் குவியும் நிதியிலிருந்தும், தக்கல் முறை பதிவிற்கு பணம் திருப்பியளிக்கும் நிலைகளே எழுவதில்லை என்ற அடிப்படையில் சேரும் நிதியிலிருந்தும் உடனடியாக பயணிகள் காப்பீடிற்காக ஒரு திட்டம் வகுத்து விபத்தில் உயிரிழந்தால் 10 லட்சத்திற்கு குறையாமல் நஷ்ட ஈடு வழங்கப் படவேண்டும்.
சாலை விபத்துக்களுக்கான நஷ்ட ஈட்டிற்கும் மாநில அரசுகள் ஒரு காப்பீடு திட்டத்தை வகுத்து அரசே செலவினை ஏற்று உடனுக்குடன் நஷ்ட ஈடு 10 லட்சத்திற்கு குறையாமல் வழங்கப்பட வேண்டும். மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டும்.
(இந்த எனது கட்டுரை தினமணி சென்னை பதிப்பில் 2 ஆக 2010 அன்று கருத்துக்களம் என்ற பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது - நன்றி தினமணி)
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நல்ல தெளிவான கருத்து, இப்போது மனித உயிர்கள் மிகவும் மலிவாகிப் போய்விட்டன..
இதற்கு தக்க நடவடிக்கை மேற்கொண்டே தீர வேண்டும்..
தொடர்ந்து எழுதுங்கள்...
வணக்கம் தோழா
மவுனம் கலைத்து பறக்கத் தொடங்கும் இந்த சாதிக்கலாம் வாங்க என்ற எழுத்துப் பயணத்துக்கு தேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.
இடுகையில் எழுதி விட்டு பத்திரிக்கைக்கு செல்வார்கள். நீங்கள் சர்வசாதாரணமாக தினமணியில் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருந்தும் இடுகையில் சமூக அக்கறையை படம் பிடித்துக் கொண்டுருக்கீறீர்கள்.
தொடர வேண்டும் உங்கள் பணி.
பின்னூட்டத்தில் இந்த வார்த்தை சோதனையை நீக்கி விடுங்கள்.
வருபவர்களுக்கு சோர்வைத் தரும்.
ஜோதிஜி
நன்றி செந்தில்.
நன்றி ஜோதிகணேசன்
உங்களின் வார்த்தைகள் என்னை
நிச்சயம் ஊக்கப்படுத்தும்
அன்பின் சம்பத்
நல்லதொரு இடுகை - தொடர்க
நல்வாழ்த்துகள் சம்பத்
நட்புடன் சீனா
Note : Please remove the word verification here - it irritates the reader
நல்ல பதிவு நண்பரே... பத்தி பிரிப்புக்கள் தெரிந்தால் நல்ல இருக்கும்..
Post a Comment