Friday, August 6, 2010
ஊழலை பொறுக்கப் பழகு ?!
(கார்ட்டூன் - நன்றி - தினமணி)
அநீதியைக் கண்டால் கோபம் கொள்ள வேண்டுமென்பதற்காக ரெளத்திரம் பழகு என்றார் மகாகவி பாரதி. ஆனால் தொடர்ந்து சமீப வருடங்களாக வெளிவரும் ஊழலின் அளவைப் பார்க்கிற போது ஊழலைப் பொறுத்துக் கொள்ளப் பழகு என இந்திய மக்கள் பழகிக் கொண்டுவிட்டார்களோ என ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது.சமீபத்திய செய்தி, காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதுடில்லியில் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளில் 3000 கோடி ஊழல் என்பதாகும். 6 அரசுத் துறைகள் பொறுப்பேற்று 9 பொருட்கள் வாங்கியதில் இதுவரை கணக்கிற்கு வந்த ஊழல் ரூ 3000 கோடி என்கிறது கடந்த 3 தினங்களாக செய்தி ஊடகங்கள்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில் சுமார் 6000 லிருந்து 8000 விலையுள்ள குளிர்சாதனப் பெட்டி (ரெப்ரெஜிரேட்டர்) ரூ 42202 வீதம் வாங்கப்பட்டிருக்கிறது. ஒரு இருக்கை (சேர்) ரூ 1000 விலையுள்ளது ரூ 8000 வீதம் வாங்கப்பட்டிருக்கிறது. வீரர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான தானியங்கி ஓடுதள (டிரட்மில்) இயந்திரம் விலைக்கு வாங்கினாலே ரூ 66000 தான் ஆவதை 9.75 லட்சத்திற்கு 45 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள், இத்தகைய பட்டியலை படித்துக் கொண்டே போனால் நமக்கு தலை சுற்றுகிறது. கடந்த ஆண்டு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 60000 கோடி ஊழல் என்ற அலையடித்தது. பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியம் இருபதிற்கு இருபது போட்டிகள் தொடர்பான விளம்பர டெண்டர்களில், இதர நடவடிக்கைகளில் 20000 கோடி ஊழல் என்ற செய்திகள்.
தற்போது காமன் வெல்த் போட்டிகளுக்கு சாதனங்கள் வாங்கியதில், வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டு கார்கள் வாடகைக்கு எடுத்ததில் ஊழல் என்கிற விபரங்கள் வெளிவந்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் திரு மணிசங்கர் ஐயர், வறுமை அதிகமுள்ள இந்திய நாட்டில் இந்த அளவிற்கு மக்கள் பணத்தை செலவு செய்து போட்டிகள் நடத்த வேண்டுமா என்பது குறித்த தனது விமர்சன கருத்தை தெரிவித்தவுடன் காங்கிரஸ், பா.ஜ.க அவரது கருத்தை தேசவிரோதம் போல் சித்தரித்து எதிர்த்தன. திரு ஐயருக்கு இத்தகைய விமர்சனம் செய்வதற்கு தகுதியிருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு பதிலாக அவர் தெரிவித்ததில் தவறென்ன இருக்கிறது என சிந்திக்க வேண்டியிருக்கிறது. நமது எதிர்கட்சிககளோ ஒருவர் அளவிற்கு அதிகமாக ஊழல் செய்தால் அவரை பதவி விலக்கு என்பதைத்தான் உயர்ந்தபட்ச கோரிக்கையாக முன்வைக்கின்றனர். அதாவது அவர் சம்பாதித்தது போதும் அடுத்தவரை சம்பாதிக்க அந்த பதவியில் அமர்த்து என்பது அரசியல் சித்தாந்தம் போலும்.
அரசின் வெளிப்படை தன்மை, செயல்பாடு விபரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளிக்கொணர யாரேனும் பொதுநல ஆர்வலர் விரும்பினால், ஆணையம் வரை முறையீடு செய்து தகவல் பெற 2 வருடம் ஆகிவிடுகிறது. அதற்குள் பல புதிய ஊழல்கள் வெளிவந்து, வெளிக்கொணர நினைக்கும் விஷயம் பழையதாய் மறந்து போகிறது.கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரன், அளவிற்கு அதிகமாக சொத்து சேர்த்தார், பொது நிலங்களை வளைத்துப் போட்டுக் கொண்டார் என்கிற புயல் வீசி சில மாதங்கள் வாதப்பிரதிவாதங்களுக்கு பிறகு அவரை தற்போது சிக்கிம் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றியதன் மூலம் பிரச்சனை முடிவிற்கு வந்தது போல் மக்களை திருப்திப் படுத்த முனைகிறது அரசு.
முன்பெல்லாம் இது போன்ற ஊழல் செய்திகள் ஊடகங்கள் வாயிலாக தெரியவரும் போது நம் நாட்டினர் மட்டும் தெரிந்து வேதனைப்படுவது என்கிற நிலை மாறி இன்று இணையதளம் என்கிற உலகளாவிய தகவல் தொடர்பு மேம்பாட்டினால் ஒரு ஊழல் செய்தி வெளிவந்தால் சர்வ தேசத்திலும் சந்தி சிரிக்கும் நிலை வந்திருக்கிறது.இது போன்ற பிரச்சனைகள் வரும் போது மக்களால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பியிருக்கிற பிரதிநிதிகள் அவை குறித்து விவாதித்து இனி வரும் காலங்களில் அவை நேராமலிருக்க என்ன செய்ய வேண்டும், நேர்ந்த தவறை எப்படி சரி செய்ய வேண்டும் என பேசுவதற்கு பதிலாக கூச்சல், குழப்பம், அவை ஒத்திவைப்பு என்பதோடு நடவடிக்கைகள் முடிந்துவிடுகிறது. மக்களும் அடுத்த ஊழல் செய்தி வெளியானவுடன் முந்தைய செய்தியை மறந்து விடுகின்றனர். இப்படியே போனால் வெகுமதி வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட பழகிவிட்ட மக்களுக்கு ஊழலைப் பொறுக்கப்பழகு என்ற நியதி ஏற்பட்டுவிடுமோ என்கிற ஐயம் தான் மிஞ்சுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நண்பரே
பத்தி பிரித்து எழுதவும்.
சரியான அளவு, நோக்கம்.
மொத்தத்தில் சிறப்பான கட்டுரை.
Post a Comment